உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11

சில சிறப்புச் செய்திகள்

ஒருவன் புகழ்வான் ஒருவன் இகழ்வான்
இரண்டுக்கும் அப்பால் இரு.


பொற்கிழி வழங்கும் விழா

தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கும். தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேவை செய்ததைப் பாராட்டும் முகத்தான் அவருக்கு நிதிதிரட்டிப் பொற்கிழி வழங்குவதென நாமக்கல்லைச் சேர்ந்த எம். செல்லப்ப ரெட்டியார், என்.கிருஷ்ணராஜ் ரெட்டியார், கே. கருப்பண்ணன் என்ற மூவரும் திட்டமிட்டனர். அது தொடர்பான அறிக்கை ஒன்றும் கீழ்க்கண்டவாறு வெளியிட்டனர்.

'பாரதிதாசன் பெருந்தொண்டிற்கு நன்றி செலுத்தும் பான்மையோடு ஒரு நிதி திரட்டிக் கவிஞர் அவர்கட்குக் கூடியவிரைவில் அளிப்பதெனத் தீர்மானித்துள்ளோம். தமிழ் அன்பர்கள் அனைவரும் இந்நிதிக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதிக்குப் பணம் அனுப்பும் அன்பர்கள் 'பாரதிதாசன் நிதிக்காக என்று குறிப்பிட்டுக் கீழ்க்கண்ட முகரிக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம்"

என். கிருஷ்ணராஜ் ரெட்டியார்

நாமக்கல் (சேலம் ஜில்லா)


பாரதிதாசன் நிதிக்குழுவில் பெரியார் ஈ.வெ.ரா. அறிஞர் அண்ணா, மாஜி அமைச்சர்கள் எஸ். இராமநாதன், எஸ். முத்தையா முதலியார், எஸ்.ஆர். சுப்பிரமணியம், சேலம் கல்லூரி முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர், ஏ.வி.பி. ஆசைத் தம்பி முதலிய பிரமுகர்களும் வேறு சிலரும் இடம் பெற்றிருந்தனர்.