பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பாரதிதாசன்

நெருங்கிய நண்பர் முத்தியாலு பேட்டை கிருஷ்ணசாமி செட்டியார் பாரதியாரால் வெல்லச்சு செட்டியார் என்று விருப்பத்தோடு அழைக்கப்பட்டவர். இவரும் எழுத்தர் சுந்தரேச ஐயரும் பாரதியாருக்கு வேண்டும்போதெல்லாம் தட்டாமல் பொருளுதவி செய்தவர்கள். குவளைக் கண்ணன் உடல் உழைப்புக்குத் தயங்காத பாரதி தொண்டர். இந்தப் பெரிய வட்டத்தோடு பாரதிதாசனும் சேர்ந்து கொண்டார்.

ஆங்கில அரசாங்கத்தின் ஒற்றர்களால் பாரதிக்கு அடிக்கடி தொல்லை ஏற்படுவதுண்டு. புதுவை எல்லையோரம் பாரதி வந்தால் அவரை எப்படியாவது கைது செய்து தமிழகத்துக்குள் கொண்டு செல்லவேண்டுமென்று அவர்கள் முயன்றனர். ஒற்றர்களின் வருகையைக் கண்காணித்துப் பாரதியை எச்சரிப்பதும் பாதுகாப்பதும் பாரதிதாசன் முக்கியப் பணி. வெளியூரிலிருந்து புதுவை வந்து மறைந்து வாழ்ந்த தேசபக்தர்களுக்கு வெளிநாட்டுக் கைக்துப்பாக்கி வாங்கிக் கொடுப்பது, பாரதி இட்ட பணிகளை யாருக்கும் தெரியாமல் செய்து முடிப்பது, பாரதிதாசன் முக்கியப் பணிகள். பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலும் பாரதியோடு அவர் வீட்டுமாடியில்தான் இருப்பார். வேணு நாயக்கரும், சிவா, நாயக்கரும் இவருடைய இணைபிரியாக் கூட்டாளிகள். சிவா நாயக்கர் பாரதிபாடல்களை மிக இனிமையாகப் பாடுவார். எனவே எல்லோரும் அவரைக் 'குயில் சிவா' என்று அழைப்பதுண்டு.

ஒருநாள் பாரதியாரின் வீட்டில் நண்பர்கள் கூட்டத்தோடு பாரதிதாசனும் இருந்தார். பாரதி அமர்ந்து வழக்கமாக எழுதும் சிறிய கணக்குப்பிள்ளை மேசை எதிரில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் பாரதிதாசன். அதைக் கவனித்த குயில் "சிவா, சுப்புரத்தினமும் அய்யர் மாதிரியே உட்கார்ந்து என்னமோ எழுதறாரப்பா!" என்று கிண்டலாகச சொன்னார்.

இதைச் செவிமடுத்த பாரதியார், "சுப்புரத்தினம் கவி எழுதக் கூடியவன்" என்று கூறினார். உடனே அங்கிருந்த நண்பர்கள் "அப்படியானால் ஒரு கவிதை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்!" என்றனர். உடனே 'எங்கெங்குக் காணினும் சக்தியடா' என்று பதினாறு வரிப்பாடலை எழுதி முடித்துப் பாடிக் காட்டினார் பாரதிதாசன்.