உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பாரதிதாசன்

வழங்கிய உயர்ந்த கோட்பாடுகள். பெரியாரின் தலையாய கொள்கை மடமை எதிர்ப்பு. இக்கொள்கைகளின் தாக்கங்களால் பாதிக்கப்பட்ட பாரதிதாசன் புரட்சிக் கவியாக மாறினார் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

பொதுவாகப் புரட்சிக் கவிஞர்கள் அஞ்சாமையும் எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சமும் மிக்கவர்கள். இப்பண்புகள் பாரதிதாசனிடம் நிறைந்திருந்தன.

இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக் குன்றை நான்
ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நானங்கோர் மறவன் கன்னற்
பொருள்தரும் தமிழே நீயோர்
பூக்காடு; நானோர்.தும்பி!

என்றும்

எவர்பேரால் ஆனாலும் உயர்ந்த தென்னும்
எதன்பேரால் ஆனாலும் ஏய்த்து வாழ்தல்
தவறேதான்! அவ்வாறு வாழ்ப வர்க்குத்
தடியடிதான்! தமிழடிதான்!

என்றும் துணிச்சலோடு பாடியிருக்கிறார்.

பொதுவாகக் கவிஞர்கள் அழகின் இருப்பிடமான வானையும், நிலவையும், கடலையும் கதிரையும் காதலையும் விரும்பிப் பாடும் இயல்பினர். ஆனால் பாரதிதாசனின் விருப்பம் வேறு விதமாக இருந்தது. பாரதிதாசன் ஒரு நாள் கவிதை எழுதுவதற்காக ஏட்டினை எடுத்தார். அப்போது வானம் தன்னை எழுதென்று சொன்னது. ஓடையும், தாமரைப்பூக்களும் காடும் கழனியும் கார்முகிலும் ஆடுமயில் நிகர் பெண்களும் எதிரில் வந்து தங்கள் அழகினைக் கவிதைகளில் வடிக்குமாறு வேண்டி நின்றனர்: