உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கவிஞர்

77

என்று பொதுவாக எண்ணுவதுண்டு. ஆனால் இருளின் அருமை காதலர்க்கும் ஓவியருக்குமே புரியும்.

பரப்பரப்பான இந்த உலகில் உழைத்துழைத்து அலுத்துப்போன மக்களைத் தன் அன்புக் கரங்களால் ஆரத் தழுவி அவர்களை அமைதியான துயிலில் ஆழ்த்துவது இருளாகிய தாய் அல்லவா? இவ்வரிய தொண்டை

ஆடிஓ டிப்போர் இட்டும்
அருந்துதல் அருந்தி யும்பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை உயிர்க்கூட் டத்தை
ஒடியே அணைப்பாய் உன்றன்
மணிநீலச் சிறக ளாவ
மூடுவாய் இருளே! அன்பின்
முழக்கமே உனக்கு நன்றி

என்று கூறிப் பாராட்டுகின்றார். பகலும், இரவும், இருளின் ஆடைகளாம், அதைச் சுவைபடப் பாடுகிறார் பாரதிதாசன்.

அடிக்கடி உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகலுடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பா டென்ன சொல்வேன்!

ஓவியருக்கு மட்டுமே உரிய ஓர் அரிய செய்தியை இப்பாடலில் விளக்குகிறார் பாரதிதாசன், ஓவியம் சிறக்க ஓவியர்கள் சில இடங்களில் இருளைப் பூசுவர்; இருட்கோடுகளை இழுப்பர். இதை அவர்கள் ஆங்கிலத்தில் Shade என்று கூறுவர். அந்த இருட் கோடுகளே ஓவியங்களின் அடையாளங்களை எடுப்பாக அறிவிக்கும். எந்தெந்த இடத்தில் இருள் அழகாக வீற்றிருக்கும் என்பதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.