உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பெண்ணுரிமை பேணியவர்

கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்; அந்தி லத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை

"ஒருவன் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த உதவுபவள் மனைவிதான். மனைவியால்தான் ஓர் ஆடவன் ஒழுங்கும் தூய்மையும் பெறுகிறான்" என்று ஆங்கிலப் பேரறிஞர் பெர்னாட்ஷா கூறியுள்ளார். இதைப் புவிப்பெரியோன் கூறிய பொன்மொழி என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

சங்ககாலத்தில் பெண்கல்வி சிறப்பாகவே இருந்திருக்கிறது. ஆண்களுக்கு இணையாகப்பெண்களும் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கியதை அவர்கள் இயற்றிய பாடல்களும் இலக்கியங்களும் மெய்ப்பிக்கின்றன.ஆனால் காலப்போக்கில் அவர்கள்கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண் போகப் பொருள் என்ற அளவிலே மதிக்கப்பட்டாள். சமூகச் சட்டங்கள் பெண்களை மிகவும் கேவலப்படுத்தின.அவள் தேரையாக, பொட்டுப் பூச்சியாக, ஊமையாக வாழும் அவல நிலை ஏற்பட்டது. புழுதி, குப்பை, உமியைவிடக் கேவலமாகப் பெண்ணினம் மதிக்கப்படும் நிலையை,

புழுதி குப்பைஉமி - இவற்றின்
புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே அவற்றைப்
பயன்படுத்து கின்றார்!
அழகிய பெண்கள் - நமக்கோ
அழுகிய பழத்தோல்

என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.