உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செலவில் ஏவப்பட்ட ஏவுகணை முயற்சிகளைக் கண்டிக்கிறார். அறிவியல் வெற்றியை விட ஆன்ம நேயத்தைச் சிறந்ததாகக் கருதுகிறார் கவிஞர்:

எழில்நிலவு நோக்கி ஏவுகணைகள்
ஏவு கின்றதால் என்னைப் போன்ற
ஏழைகட் கென்ன கிடைக்கக் கூடும்?

வீட்டு வசதியை ஏவுகணை கூட்டுமா?
பணிமனைப் பெண்ணின் பாதுகாப்பிற்குப்
பறக்கும் நிலவு பண்ணிய தென்ன?

ஏவுகணை ஒன்றை இயற்று தற்குச்
செலவிடும் பெருந்தொகை இருந்தால்
உலவும் ஏழை மக்களுக் குதவுமே!

என்று கூறி உலக மக்களின் சிந்தனையையும் கிளறுகிறார். 'புதியதோர் உலகு செய்வோம்' என்று உலக மக்களுக்கு அறை கூவல் விடுக்கிறார்.

ஏறு வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு! மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்
அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள் உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும்; பேதமில்லை
உலகம் உண்ணஉண்: உடுத்த உடுப்பாய்!

என்று உலகில் உள்ள மக்களுக்கு மனிதநேயத்தை ஊட்டுகிறார் கவிஞர்.