தனித்துக் கிடந்திடும் லாயம்
-அதில்
தள்ளியடைக்கப் படுங்குதிரைக்கும்
கனைத்திட உத்தரவுண்டு
-வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்
என்று பாடுகிறார். இவ்வாறு வீட்டில் அடைபட்டு அடிமைபோல் வாழ்ந்த பெண்ணினம் அடைந்த இழிநிலையை 'நம்மாதர்' என்ற கவிதையில் அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார்.
பழங்கல அறைக்குளே பதினைந்து திருடர்கள்
பதுங்கிடவும் வசதி யுண்டு
பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும்
பதிந்திடவும் வசதி யுண்டு
முழங்கள் பதினெட்டிலே மாற்றமில் லாவிடினும்
முன்றானை மாற்ற முண்டு
முடுகிவரும் நோய்க்கெலாம் கடவுளினை வேண்டியே
முடிவடைய மார்க்க முண்டு
தொழுங்கணவன் ஆடையில் சிறுபொத்தல் தைக்கவும்
தொகைகேட்கும் ஆட்கள் வேண்டும்
தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ
சுவருண்டு வீட்டில் இந்த
ஒழுங்கெலாம் நம் மாதர் வாரத்தின் ஏழுநாள்
உயர்விரதம் மேற்கொள்வதால்
உற்றபலன் அல்லவோ அறிவியக் கங்கண்
டுணர்ந்த பாரத தேசமே!
பெண்டிரின் இவ்விழி நிலைக்கும் கொடுமைகளுக்கும் காரணம் கல்வியறிவின்மையே என்பதை உணர்த்த வந்த பாரதிதாசன் பெண் கல்வியின் இன்றியமையாமையை விளக்க அழகிய இசைப் பாடல்களை எழுதியுள்ளார். பள்ளிக்குச் செல்லமறுக்கும் தன் பெண் குழந்தைக்குத் தந்தை அறிவுரை கூறுவதுபோல அமைந்த பாடல் சிறப்பானது.
தலைவாரிப் பூச்சூடி உன்னைப்-பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை