பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

தமிழ்மொழி இலக்கிய வரலாற்றில் தமிழ்ப்பற்று - தாய்மொழிப்பற்று எனும் உயர் உணர்ச்சியைத் தமிழன் உள்ளத்தில் முத்தமிழிலும் ஊற்றி அளித்து, மொழியுணர்வு வேளாண்மைச் செய்த தன்னிகரற்ற முதற் கவிஞர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவருக்கு நிகர் அவர் நமக்களித்துள்ள புரட்சித் தமிழ்க்குரலே ஆகும். மொழிப்புரட்சி ஏற்பட்ட போதெல்லாம் விழிப்புணர்ச்சி யூட்டித் தமிழ் வேங்கைகளைச் ‘சிறுத்தையே வெளியே வா! ‘தமிழ்ச் சிந்துபாடு!’ ‘தமிழ்’ அழியுமானால் தமிழர் அழிவர்! சிங்கக் குகையில் நரிக்கிடம் தந்தோம், செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்! பொங்கும் உணர்வால், எம் தமிழரசு போர் தொடங்கிற்றுக் கொட்டடா முரசு!’ என்று முரசறைந்த முதல் மாகவிஞர்.

தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால்
தூய்தமிழ் பிதற்றும் என்வாய்.
ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை எல்லாம்
தேக்கியென் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்

எனத் தன்னுயிர் - தன்பணி - தன் மூச்சுத் தமிழ்ப் பணிக்கே என்று முழங்கிய முத்தமிழ்க் கவிஞர்.

நாட்டும் சீர்த் தமிழன் இந்த நானில மாயம் கண்டு
காட்டிய வழியிற் சென்று கதிபெற வேண்டும் என்றே
ஆட்டும்சுட் டுவிரல் கண்டே ஆடிற்று வையம் என்று
கேட்டுநான் இன்ப ஊற்றுக் கேணியிற் குளிப்ப தெந்நாள்?

என்ற புரட்சிக்கவியின் கனவு நனவாகத் தமிழர் நாள் தோறும் தமிழ் உணர்வை வளர்த்து, அயர்வு தீர்ந்து,