சுவையின் எல்லை இவை நம்கண்முன் வந்துவிடுகின்றன. வரிசையாக மலர்களின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சொற்களில் தாயின் அன்பு நிறைந்து, நாமும் கவிதையின் உணர்ச்சி வரப்பட்டு நிற்கிறோம், நேர்முகமாய் உணர்ச்சி வசமாகும் போது, சொற்கோவையோ விளக்கமோ தேவையில்லாமற் போகிறது. குழந்தையால் யாருக்குத்தான் இன்பம் இல்லை? முல்லையும் தாமரையும் மல்லிகையும் சண்பகமும் யாருக்குத்தான் இன்பம் தரமாட்டா?
கவிஞரே தாயாகப் பாடுகிறார். அவருடைய அனுபவம் பாட்டாகிறது. கவிஞருடைய மனம் சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார் அருட் பாசுரங்களிலும் நிரம்பிய ஈடுபாடு உள்ள மனம். ஆதலால், அதற்கேற்றவாறே குழந்தையும் காட்சியளிக்கிறான்.
பூமாலை வாடும் மணம்
பொன்மாலைக் கில்லையென்று
பாமாலை வைத்தீசன்
பாதம் பணிபவனோ!
பாலமுதம் உண்டுதமிழ்ப்
பாமாலை பாடியிந்தத்
தாலம் புகழவரும்
சம்பந்தன் நீதானோ!
கொன்றையணிந்தம்பலத்தில்
கூத்தாடும் ஐயனுக்கு
வன்றொண்டனாக
வளர்ந்தவனம் நீதானோ!