உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில வேடிக்கைக்‌ கதைகள்‌

277

நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு தண்ணீரும் குடிப்பான். அவனிடம் ஒரு கிளியுண்டு. மடத்துக்கு வரும் ஜனங்களிடம் ஸ்காந்த புராணம் சொல்லிப் பிரசங்கம் செய்வது அந்தப் பரதேசியின் தொழில். பிரசங்கம் தொடங்கு முன்பு பரதேசி கிளியை நோக்கி,

“முருகா, முருகா, ஒரு கதை சொல்லு” என்பான்.

உடனே கிளி ஏதோ கங்கா மங்காவென்று குழறும். பரதேசி சொல்லுவான்:

“அடியார்களே இங்கிருப்பது கிளியன்று. இவர் சுகப்பிரம ரிஷி. இவர் சொல்லிய வசனம் உங்கள் செவியில் தெளிவாக விழுந்திருக்கும். சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நான் அவர் சொல்லியதை மற்றொரு முறை சொல்லுகிறேன்.

கங்கா மங்கை மைந்தன்
பாம்பைத் தின்றது மயில்
மயிலின் மேலே கந்தன்

“இதன் பொருள் என்னவென்றால்...“ இவ்விதமாகத் தொடங்கியப் பரதேசி, கந்த புராணம் முழுவதையும் நவரசங்களைச் சேர்த்துச் சோனாமாரியாகப் பொழிவான். ஜனங்கள் கேட்டுப் பரவசமடைந்து போய் பொன் பொன்னாகப் பாத காணிக்கை குவிப்பார்கள். அவன் அந்தப் பணத்தை எவ்விதமாகச் செலவழிப்பானோ யாருக்கும் தெரியாது. அது தேவர், மனுஷ்யர், அசுரர் மூன்று ஜாதியாருக்கும் தெரியாத ரகசியம். இருந்தாலும் ஊரில் வதந்தியெப்படி யென்றால், இவன் மேற்படி பொன்னையெல்லாம் மலையடி வாரத்தில் ஏதோ ஒரு குகைக்குள் பதுக்கி வைத்திருப்பதாகவும், இருபது வருஷத்துக்குப் பிறகு அத்தனை பொன்னையும் எடுத்துப் பெரிய கோவில் கட்டப் போவதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.