நவதந்திரக் கதைகள்
81
“வாரீர், மக்களே, நான் சொல்லப் போவதை சாவதானமாகக் கேளுங்கள். என்னுடைய ஜீவன் இவ்வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்டது. விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாகக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கெனவே மிகுதியாய் விட்டது; இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப் படக்கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்களென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலையுண்டாகிறது. ஆயினும், லெளகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லி விட்டுப் போகிறேன். தினந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்” என்றார். அப்படியே, பிள்ளைகள் சரியென்று அங்கீகாரம் செய்து கொண்டனர். பிள்ளைகளிலே மூத்தவன் பெயர் வாசு தேவன். இரண்டாமவன் பெயர் காளிதாஸன், மூன்றாவது பிள்ளைக்கு ஆஞ்சநேயன் என்று பெயர்.
முதற் பகுதி
பயனறிதல்
அன்று மாலை மூன்று பிள்ளைகளும் சந்தி ஜபங்களை முடித்துக்கொண்டு, பிதாவிடம் வந்து நமஸ்காரம் செய்து விட்டுக் ‘கதை‘ கேட்க வந்திருக்கிறோம் என்றார்கள். விவேக சாஸ்திரி தம் பிள்ளைகளை அன்புடன் உட்காரச் சொல்லி ”குழந்தைகளே! நமது குலதேவதையாகிய காசி-விசாலாக்ஷியை ஸ்மரித்துக் கொள்ளுங்கள்” என்றார். அப்படியே மூவரும் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் தியானம்