உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பாரதியார் கதைகள்

செய்து முடித்தார்கள். பிறகு பிதா கதை சொல்லத் தொடங்கினார்:—

”கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப் படுவான்” என்றார்.

”அதெப்படி?” என்று பிள்ளைகள் கேட்டார்கள்.

சங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை

பிதா சொல்லுகிறார்:—

பொதிய மலைக் காட்டிலே, ரஸிக சிரோமணி என்றொரு கழுதையிருந்தது. அது புல்லாந் தரைகளிலே மேய்ந்து நன்றாகக் கொழுப்படைந்து வருகையில் வசந்த காலத்தில், ஒருநாள் மாலை, ஒரு மாமரத்தின் பக்கமாகப் போகும்போது, கிளையின்மேல் மதுகண்டிகை என்றதோர் குயில் பாடிக் கொண்டிருந்தது. அதை ரஸிக சிரோமணி சிறிதுநேரம் நின்று கேட்டது. குயிலின் பாட்டு மனோகரமாக இருந்தது. அந்தப் பாட்டிலே கழுதை மயங்கிப்போய் மதுகண்டிகையை நோக்கிச் சொல்லுகிறது:— ”பெண்ணே, உன்பாட்டு எனக்குப் பரவச முண்டாக்குகிறது. ஆகா! சங்கீதத்தின் இன்பமே இன்பம்! உனது குரல் சன்னமானது. நமக்குக் கனத்த சாரீரம். உனக்குள்ள பயிற்சியும் திறமையும் நமக்கிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். காட்டிலுள்ள மிருகங்களெல்லாம் கேட்டு வியப்படையும். சிங்கராஜா நம்மை சமஸ்தானத்து வித்வானாக நியமனம் செய்வார். ‘இந்தக் காட்டிலுள்ள புல்லாந்தரைகளிலே ரஸிக சிரோமணி ஒருவன்தான் மேயலாம். மற்ற எந்த மிருகமும் மேயக் கூடாது’ என்று கட்டளை பிறப்பித்துவிடுவார். பிறகு நமக்கு யாதொரு