பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


கொண்டு குற்றும் போது பாடப்படுவது. தேவந்தி அரற்று, காவற்பெண்டு அரற்று, அடித்தோழி அரற்று என அமைந்துள்ள பாடல்கள் துக்க மேலீட்டால் கையற்றுப் பாடப் படுவன. இவை இக்காலத்தே நாட்டு வழக்கில் கூறப்படும் ‘ஒப்பாரி’ வகையன.

இவ்வாறு விளையாட்டு, இல்லத்தொழில், துயரநிலை ஆகியவற்றிற்காகும் இசை முறைகளையும் கொண்டு சிலப்பதிகாரம் இசையிலக்கியப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதுபோன்ற இசை நிறைவாய் அமைந்த வேறொரு தொடர் நிலைச் செய்யுள்-காப்பியம் இல்லை எனலாம். இவற்றின் வாயிலாக இளங்கோவடிகளின் இசைப் புலமையையும், இசை உணர்வையும் சிலம்பில் காணலாம். பாரதியார் சிலம்பில் ஆழ்ந்திருக்கும் இளங்கோவடிகளது இசை உணர்வைக் கண்டார்;

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்”
என்று பாடினார்

‘சேரன்தம்பி சிலம்பை எழுதியதும்’ என்று பாடவில்லை; ‘சிலம்பை யாத்ததும்’ என்று பாடவில்லை. “சிலம்பை இசைத்ததும்” என்று பாடினார். இளங்கோவடிகள் சிலம்பில் இசைத்திருப்பனவற்றை எல்லாம் பாரதியார் நிரலே காண்கிறார்.

சிலம்பின் முதற்காதை மங்கல வாழ்த்துப்பாடல். முதற் காதைப் பெயரிலேயே பாடல் அமைந்தது. இக்காதையில்,

23