பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் இவர் சிறுவயதாக இருக்கும்போது இவருடைய தந்தை சின்னச்சாமி ஐயர் வைத்தது தான் சட்டம். யாரும் அவரிடம் எதிரில் நின்று பேசவும் அஞ்சுவார்களாம்.

பாரதியார் அந்தச் சிறு வயதிலே என்ன செய்வார் பாவம் - பேசாமல் மணம் செய்து கொண்டார். இவருடைய மனைவியின் பெயர் செல்லம்மா என்பது.

இவர்களுக்குப் பிறந்த முதல் பெண்ணின் பெயர் தங்கம்மா. அவளை பாரதியார் காசியிலுள்ள தமது அத்தை வீட்டிற்கு அனுப்பினார். அத்தை வீட்டில் அந்தக் குழந்தை வளர்ந்து வந்தது.

பாரதியாருக்கு மற்றொரு பெண் குழந்தை உண்டு. அதன் பெயர் சகுந்தலா.

பாரதியாருக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். இந்த அன்பைக் கண்ணம்மா-என் குழந்தை என்ற பாடலில் மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கண்ணன் என்பது கிருஷ்ணனுக்கு ஒரு பெயர் அல்லவா? கிருஷ்ணன் விஷ்ணுவின் அவதாரம் என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்தக் கிருஷ்ணனைக் கண்ணன் பாட்டு என்ற தம்முடைய நூலில் பாரதியார் பாடியிருக்கிறார். இசையோடு பாடுவதற்கு மிகப் பொருத்தமானவை அந்தப் பாடல்கள்.

கடவுளை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வணங்கலாம். அவரைத் தாயாக நினைத்து வணங்கலாம். தந்தையாக நினைத்து வணங்கலாம். குழந்தையாக நினைத்தும் வணங்கலாம்.

14