பக்கம்:பாரி வேள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்று வந்த புலவர்கள் அவனுடைய பெருமையைப் பல படியாக எடுத்துச் சொன்னார்கள். அதைக் கபிலர் கேட்டார். அத்தகைய வள்ளலைக் காண வேண்டும் என்ற ஆவல் அப் புலவர்பிரானுக்கும் உண்டாயிற்று.

ஒரு நாள் பாரிவேள் தக்க பெரியார் ஒருவரை மதுரைக்கு அனுப்பினான். கபிலரிடம் சென்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கும்படி சொல்லி விடுத்தான். அவர் கபிலரை அணுகிப் பாரியின் ஆர்வத்தை எடுத்துரைத்தார். "புலவர் பலரைக் கண்டு அளவளாவி மகிழும் பேறு எங்கள் மன்னருக்குக் கிடைத்திருக்கிறது. புலவர் வாராத நாளை இழவு நாளாக எண்ணுபவர் அவர். எப்போதும் புலவர் கூட்டத்திடையே இருந்து அவர்களுடைய தமிழ்ச் சுவை செறிந்த பாடல்களிலும் உரைகளிலும் மூழ்கித் திளைப்பவர். இவ்வளவு இருந்தும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. வானத்தில் மீன்கள் எல்லாம் சுடர் விட்டு விளங்கினால் என்ன? திங்கள் தோன்றி ஒளி விட்டால்தான் என்ன? வீடுதோறும் பல விளக்குகளை ஏற்றினால் என்ன? கதிரவன் வானில் ஒளிவிடு வதற்கு ஒப்பாகுமா? புலவர்களுக்குள் கதிரவனைப் போல் விளங்கும் தங்களுடைய சந்திப்புக் கிடைக்காததை எண்ணி எங்கள் மன்னர் வாடுகிறார். நாளுக்கு நாள் தங்களைப் பற்றிய செய்திகள் அவர் காதில் மிகுதியாக விழுந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைக் கேட்கக் கேட்க மன்னருடைய ஆவல் தீப்போலக் கொழுந்துவிட்டுப் படர்கிறது. உலகம் புகழும் மதுரை மாநகரில் இருந்து விளங்கும் தங்களுக்கு எங்கள் ஊர் ஊராகவே தோன்றாது. தமிழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/18&oldid=958534" இலிருந்து மீள்விக்கப்பட்டது