பக்கம்:பாரி வேள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரை மாநகரில் பாண்டியனுடைய ஆதரவில் தமிழ்ச் சங்கம் நடைபெற்று வந்தது. அங்கே புலவர் பலர் இருந்து தமிழாராய்ச்சி செய்து வந்தனர். அவர்களுக்குள் தலைவராக இருந்தவர் கபிலர். பாண்டியனுடைய பெருமதிப்பைப் பெற்றவர் அவர். புலவர்களும் அவரைத் தம் தலைவராக ஏற்றுக்கொண்டு வழி பட்டனர். அதற்குக் காரணம் கபிலர் இணையற்ற புலமையுடையவர் என்பது மாத்திரம் அன்று. அவருடைய சிறந்த பண்புகளும் அவரைச் சிறந்தவராகச் செய்தன. "புலன் அழுக்கற்ற அந்தணாளன்" என்று புலவர்கள் அவரைப் போற்றினர். அவர் பொய் பேசாத புனித இயல்பினர். அவர் ஒருவரைப் பாடினால் பாடப் பெற்றவர் தமிழ் நாட்டின் பெரு மதிப்புக்கு உரியவராவார். ஒழுக்கத்தில் சிறந்து, அன்பில் ஓங்கி, புலமையில் வீறுபெற்று, அருள் நிரம்பி விளங்கிய கபிலர் புலவர் குழுவாகிய நட்சத்திரக்கூட்டத்தில் சந்திரனைப்போல ஒளிர்ந்தார்; பல மலர்களினிடையே உயர்ந்து தோன்றும் தாமரை மலரைப்போல விளங்கினார்.

அவர் எளிதில் யாரையும் போய்ப் பார்ப்பதில்லை. அவரை விரும்பி யாரேனும் அவர் இருக்குமிடத்துக்கு வந்து பார்த்தால் அன்புடன் அளவளாவுவார். வற்புறுத்தி அழைத்துச் சென்றால் உடன் சென்று சின்னாள் தங்கி மீண்டும் மதுரைக்கு வந்துவிடுவார்.

இவ்வாறு தம்முடைய புகழைப் பரப்பி விளங்கிய கபிலரைப் பற்றிய செய்திகளைத் தன்னிடம் வந்த புலவர்கள் வாயிலாகப் பாரிவேள் அறிந்தான். அவரைக் கண்டு வணங்கி அளவளாவி இன்புறவேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு உண்டாயிற்று. பாரியினிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/17&oldid=958533" இலிருந்து மீள்விக்கப்பட்டது