பக்கம்:பாரி வேள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலர் வருகை

பாரியின் புகழைக் கேள்வியுற்ற புலவர்கள் அவனிடம் வந்து அவனுடைய உபசாரங்களைப் பெற்றுச் சில நாள் அவனிடம் தங்கினர். எத்தனை நாள் தங்கினாலும் சிறிதும் சலிப்பின்றி ஒரு நாளைப்போலவே என்றும் மாறாத அன்பு காட்டி விருந்துணவு அளித்துப் பாராட்டினான் பாரி. இனிய தமிழ்ப் பாக்களைப் புலவர்களின் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்தான். இடையிடையே அவன் கூறிய கருத்துக்கள் அவனுடைய நுட்பமான அறிவையும் விரிந்த புலமையையும் வெளிப் படுத்தின. பல நாட்டுப் புலவர்களோடு பழகி அவர்களுடைய கவிதைகளையும் தமிழ்ச் சுவை ததும்பும் உரைகளையும் செவி மடுப்பதையே பொழுது போக்காகப் பெற்ற அந்த வேளுக்கு விரிந்த புலமை அமைவது வியப்பு ஆகுமா? அறிவுடைய ஒருவனுடன் பழகுவதென்றால் புலவர்களுக்கு விருப்பம் மிகுதி. இடம் தெரிந்து உவக்கும் இயல்புடையவனென்றால் அவர்களுக்கு அவனே தெய்வம். வரிசை யறிந்து பரிசில் நல்குபவனாக இருந்துவிட்டாலோ, அவன் வாழும் இடமே அவர்களுக்குச் சொந்தமாகி விடும். பாரி அறிவிற் சிறந்தவன்; சுவையுணர்ந்து பாராட்டுவதில் சிறிதும் உலோபம்இல்லாதவன்; வரிசையறிந்து பொருள் வழங்குவதில் எல்லா வள்ளல்களையும் விடச் சிறந்தவன். இத்தகையவனிடம் புலவர்கள் வந்து மொய்ப்பது இயல்புதானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/16&oldid=958532" இலிருந்து மீள்விக்கப்பட்டது