பக்கம்:பாரி வேள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரவேற்பு அளித்துப் பாராட்ட ஆயத்தமாக இருந்தான் பாரி வள்ளல். வழிபடு தெய்வம் காட்சி அளிப்பதாக இருந்தால் எத்துணை ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்களோ அப்படி அந்தக் கூட்டத்தினர் அனைவரும் காத்திருந்தனர்.

அறிவிலும் ஆண்டிலும் அநுபவத்திலும் பழுத்த கபிலர் பறம்பு நாட்டுக்கு வந்தார். வரும்போதே அந்த நாட்டார் களிப்பினால் ஆரவாரம் செய்தனர். துகிலை வீசி எறிந்து தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். குடம் குடமாக நீரைக் கொணர்ந்து அவர் திருவடி களைக் கழுவினர். நிலத்திலே விழுந்து பணிந்தனர். பழுத்த கிழவர் சிலர் அப்புலவர் சிகாமணியை அணுகி, "தேவரீர் திருவடி பட இந் நாடு பலகோடி காலம் தவம் செய்திருக்க வேண்டும்' என்று நாத் தழு தழுக்கப் பாராட்டினர்.

கபிலர் மெல்ல மெல்ல நடந்து வந்தார். குடி மக்களுடைய அன்பு அவருடைய நடையின் வேகத்தைக் குறைத்தது. கூடிய கூட்டம் அவரை மேற்செல்ல விடாமல் தடுத்தது. வழியைச் சிலர் விலக்க, அவர் மெல்ல மெல்லப் பாரியைக் காணும் பேராவலோடு நடந்தார். அவர் மெல்ல நடந்தாரேயொழிய அவர் உள்ளம் மிக மிக விரைவாகச் சென்றது. தமக்கு நடைபெறும் உபசாரத்தைக் கண்டு அவர் மனம் உருகியது. குடிமக்களே இவ்வளவு அன்பு பாராட்டினால் அவர்களுடைய கோனாகிய பாரி எப்படி இருப்பான்' என்று வியந்தார். மாட மாளிகை, கூட கோபுரங்கள் மல்கிய மதுரை மாநகரத்துச் செல்வர்கள் காட்டும் அன்பையும் கூறும் பாராட்டையும் உணர்ந்தவர் அவர். ஆயினும், இந்தச் சிற்றுாரில் பறம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/20&oldid=958536" இலிருந்து மீள்விக்கப்பட்டது