பக்கம்:பாரி வேள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு மக்களிற் பெரும்பாலோர் கூடி நின்று தம் அன்பு வெள்ளம்போல் பெருக்கெடுத்தோட வரவேற்கும் வைபவத்தைக் கண்டு அவர் மயங்கினார். உள்ளத்திலிருந்து பொங்கி வழியும் அன்பே உருவங் கொண்டதுபோல இருந்தது அந்தக் கூட்டம்.

மெல்ல மெல்ல நடந்து சென்றார். அவரைக் கைலாகு கொடுத்து ஒர் அதிகாரி அழைத்துச் சென்றார். வரவேற்புக்காக அமைந்திருந்த இடம் வந்து விட்டது. இன்னிசைக் கருவிகள் ஒலித்தன. முரசு முழங்கியது. முழவு ஓசை பரப்பியது. மங்கையர் பாடினர். பாணர் யாழ் வாசித்தனர். விறலியர் கூத்தாடினர். ஒரு பெரிய சக்கரவர்த்தியை வரவேற்பது போலப் பாரிவேள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

கபிலர் பந்தலுக்குள் கால் வைத்தார். பல நாள் பிரிந்திருந்த ஆவினைக் கண்ட கன்றைப்போல ஒடிச் சென்று புலவர் பெருமானின் திருவடிகளில் பணியப் புகுந்தான் பாரி. அவன் தம் அடிகளில் விழுவதற்கு முன் அவனைத் தாங்கித் தழுவிக் கொண்டார் கபிலர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பேச்சு எழவில்லை. சிறிது நேரம் இருதயமும் இருதயமும் பேசிக்கொண்டன. பாரி கண்களில் நீர் சுரந்தது,

நாக் குழற அன்பு பொங்க ஒவ்வொரு வார்த்தையாக வெளியிட்டான் பாரி; "புலவர் பெருமான் இங்கே எழுந்தருள நான் என்ன தவம் செய்திருந்தேன்! இந்த நாடு பண்ணிய தவந்தான் எத்தனை பெரியது! பல காலமாக ஏங்கிக்கிடந்த ஒன்று இன்று இறைவன் திருவருளால் நிறைவேறியது. என் வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு குறையைத் தாங்கள் நிறைவேற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/21&oldid=958537" இலிருந்து மீள்விக்கப்பட்டது