பக்கம்:பாரி வேள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டீர்கள்!" இவ்வளவையும் அவன் தொடர்ந்து சொல்லிவிடவில்லை. சிறிது சிறிதாகச் சொன்னான். அப்படித்தான் சொல்ல முடிந்தது. அவன் உள்ளத்திலே கொந்தளித்த உணர்ச்சிப் பெருக்கு அவனை அப்படி ஆக்கியது.

"பாரி மன்னா, உன்னுடைய புகழை நான் பல காலமாகக் கேட்டு வருகிறேன். தன்னுடைய உயிரைக் காட்டிலும் சிறப்பாகப் புலவரை ஓம்பும் வள்ளல் என்று உன்னைப்பற்றித் தமிழுலகமே பாராட்டுவதை நான் அறிவேன். உன்னைக் கண்டு மகிழவேண்டும் என்ற விருப்பம் எனக்கும் மிகுதியாக இருந்தது. எதுவும் உரிய காலத்தில்தான் நிறைவேறும். அருள் கூட்டி வைக்கும்போதுதான் கூட முடியும். இல்லையானால் எத்தனை முயற்சி செய்தாலும் கூட இயலாது. உன்னைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததனால் எனக்கு உண்டாகியிருக்கும் இன்பத்துக்கு ஒப்பாக எதைச் சொல்லலாம் என்று நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உன் பெருமை வாழ்க!" என்று புலவர்பிரான் பேசியதை யாவரும் கேட்டனர்.

அவரைத் தக்க ஆசனத்தில் இருக்கச் செய்து மாலை அணிவித்துப் பழமும் இளநீரும் பாலும் அளித்தான் பாரிவேள். "சற்று ஓய்வுகொண்டு மலையின் மேல் போகலாமா?" என்று கேட்டான். கபிலர், "ஏன், இப்போதே செல்லலாமே!" என்று கூறவே, அந்தக் கூட்டத்தினர் யாவரும் பறம்பின் மேல் ஏறலாயினர்.

போகும்போதே கபிலர் அந்த மலையின் அமைப்பைப் பார்த்தார். அதன் வளத்தையும் எழிலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/22&oldid=958538" இலிருந்து மீள்விக்கப்பட்டது