பக்கம்:பாரி வேள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்களால் மொண்டு மொண்டு உண்டார். இறைவனுடைய கருணையினால் நல்ல வளம் மல்கிய மலை அது என்று தெரிந்துகொண்டார். அத்தகைய வளம் பொருந்திய மலையும், அன்பிலே சிறந்து நிற்கும் குடி மக்களும், இடையறாமல் உடனிருந்து தமிழ்ச் சுவையை ஊட்டிப் புகழ்பாடும் புலவர்களும் பாரியின் தவத்தையும் அன்பையும் வள்ளன்மையையும் காட்டும் அடையாளங்களாகத் தோன்றினர். 'ஒரு சிறிய இடத்தில் இருந்துகொண்டு இத்தனை பேருடைய உள்ளத்தையும் பிணிக்கும் இயல்புடைய இப் பாரிக்கு எந்த முடி மன்னனும் ஈடாகமாட்டான்' என்ற எண்ணம் கபிலருக்கு உண்டாயிற்று.

அவர் மலைமீது ஏறிக்கொண்டிருந்தார். அவருடைய உள்ளமாகிய சிங்காதனத்தில் பாரிவேள் ஏறிக்கொண்டிருந்தான். கபிலரும் பிறரும் பறம்பின் மேற்பரப்பை அடைந்தனர். பாரியின் மாளிகைக்கு அனைவரும் சென்றனர்.

அங்கும் கபிலருக்கு வரவேற்பு நிகழ்ந்தது. பாரியின் மனைவியும் மகளிராகிய அங்கவையும் சங்கவையும் புலவர் பெருமானை வணங்கினர். "இந்தக் குடில் இன்று புனிதம் அடைந்தது" என்று பாரி புளகம் போர்ப்ப மகிழ்ந்து கூறி உபசரித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/23&oldid=958539" இலிருந்து மீள்விக்கப்பட்டது