பக்கம்:பாரி வேள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

சங்கப் பாடல்களின் வாயிலாகப் பல புலவர்களையும் புரவலர்களையும் நாம் தெரிந்துகொள்ளுகிறோம். சிந்தனைச் செல்வமும் கற்பனை வளமும் படைத்த புலவர்கள் பண்பிலே சிறந்த சான்றோர்களாகவும் விளங்கினார்கள். அதனால் பண்புடைய மக்களை அணுகி அவர்களுடைய இயல்புகளைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினார்கள். அவர்களுடைய பாராட்டைப் பெற்ற குரிசில்கள் இறந்தும் இறவாதவர்களாகப் புகழுடம்புடன் விளங்குகிறார்கள். அவர்களுக்குள் சிறந்தவர்களாக ஏழுபேரைத் தமிழிலக்கியம் எடுத்துச் சொல்கிறது. ஏழு வள்ளல்கள் என்று அவர்களை ஒருங்கே சொல்வது மரபாகிவிட்டது. பிற்காலத்தில் வேறு இரண்டு வள்ளல் வரிசைகளைப் புராணங் களிலிருந்து எடுத்துக் கோத்துவிட்டதனால் இவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஏழு வள்ளல்களே சரித்திர புருஷர்கள்; இவர்களுடைய வரலாற்றுக்கு இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்த ஏழுவள்ளல்களிலும் தலைசிறந்தவன் பாரிவேள். இன்று பிரான்மலை என்று வழங்கும் பறம்பு மலையில், வாழ்ந்தவன் அவன். புலவர் பெருமக்களிற் சிறந்த கபிலரும் பாரியும் ஆருயிர் நண்பர்கள். கபிலருடைய பாட்டுக்களில்தான் பாரி இன்றும் வாழ்கிறான் அவனுடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் புறநானுாற்றிலுள்ள பல பாடல்களும் சில தனிப்பாடல்களும் உதவியாக இருக்கின்றன.

இந்தப் புத்தகத்தில் உள்ள வரலாறு பெரும்பாலும் சங்கநூற் செய்யுட்களை அடிபடையாகக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/5&oldid=958382" இலிருந்து மீள்விக்கப்பட்டது