பக்கம்:பாற்கடல்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

லா. ச. ராமாமிருதம்


டிருக்கிறேன். இது ஒரு பாஷை, தூரிகையெடுத்தவன்தான் ஓவியன்; பேனா பயில்பவன்தான் கவிஞன் - கலைஞன் ! உளியெடுப்பவன்தான் சிற்பி என்றல்ல. உயிரின் செயலே, உலகமே என் ஓவியச் சிலையில் ஆடுவதுதான். ஓரளவு கற்பனையில்லாமல் உலகில் வாழ முடியாது. கற்பனை என்பது பலர் நினைப்பது போல் வெறும் கனவு - கட்டுக்கதை புனைவதல்ல. தரிசனத்துக்குத் தன் உள் சக்தியைச் சமயம் வரும்போதெல்லாம் வளர்த்துக்கொண்டே இருப்பதுதான் கற்பனை. தன் வண்ணத்தை என் கைவண்ணத்தில் விளம்பல். அலுக்காத விளம்பல்.

திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, சூக்ஷமம், வெளிப்படை சத்தியம், உயிர் தேடும் விடுதலை, நித்தியம், எல்லாமே இதில்தான் இருக்கிறது. பிறவியே அதற்குத்தான். திரும்பத் திரும்ப.

'தெலிஸி ராமச்சந்தர மதுரை மணியிடம் எத்தனை முறைதான் கேளுங்களேன், அலுக்காது. நேரில் கேட்டவருக்கு அந்த பாக்கியம் தெரியும். ஏன்? மனுஷன் தனக்காகவே பாடிக்கொண்டிருந்தான். தான் கண்ட இன்பம் வையகமும் உய்ந்தது. உச்சாடனம் கூடக்கூட மந்திரத்துக்கு வலு ஏறுகிறது.

கோடி கோடி ராமகோடி
    கோடி ராம
நாம கோடி. 'ஓம்' இன் 'ஹம்'
    கேட்க ஆரம்பிக்கவில்லை?
ஓமின் ஹம்மில் எது
    நாமம் எது ராமம்?

எது எதுவாய் இருந்துவிட்டுப் போகட்டும்; அதுவே ஆனந்தத்தின் மீட்டல் ஆரம்பித்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/240&oldid=1533321" இலிருந்து மீள்விக்கப்பட்டது