பக்கம்:பாற்கடல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

263


அடிக்கடி சுவாஸம் கட்டி இழுக்கும். ஆனால் குடித்தனங்களுக்குக் குறைவில்லை. பட்டணத்தின் மர்மமே இதுதான்; ஆயிரம் அசௌகரியங்களிடையே அத்தியாவசியங்களைக்கூடத் தியாகம் பண்ணிக்கொண்டு நெரிசலே ஆனந்தம். வேறு வழியில்லை என்று இப்போது சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வழியிருந்த போதும் தேடிக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இஷ்டமில்லை.

பார்வதி சித்தியை அன்று நான் முதன்முதலாகக் காண்கையில், அவளுக்கு வயது பதினெட்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஏற்கெனவே நான் முன் பகுதிகளில் தெரிவித்திருந்தபடி, அவளுக்கு முழங்காலில் புற்றுநோய் கண்டு, கிடந்து இறக்கையில் நாற்பதைக்கூட எட்டிப் பிடிக்கவில்லை என்றே என் நினைப்பு. நோயினின்று தனக்கு மீட்சி இல்லை என்று திரிபறத் தெளிவான பிறகு நோய்க் கொடுமையால் அந்திமக் காலத்தில் மனங்கசந்து போனாள். எனினும் எங்கள் பார்வதி சித்திபோல் தங்கமான சித்தி கிடையாது.

சித்தி பற்றி ஒரு சுவாரஸ்யமான கதாம்சம்: அவளுடைய கலியான தினத்தன்று அவளைக் கன்னிகாதானம் செய்துவிட்டுப் போன தாய் தந்தையர் அன்றிலிருந்து பிறகு அவள் செத்தாளா இருக்கிறாளா என்று எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதே நிலையில் அவள் செத்தும் போனாள் எனில் இக்காலத்தில் யாரேனும் நம்புவார்களா? நம்புவார்களோ மாட்டார்களோ, உள்ளது என்னவோ அப்படித்தான். எட்டுப் பெண்களுக்கு நடுவில் அவள் ஒருத்தி ஸ்வாமி! கைவிட்டுக் கழிந்தால் போதும், விட்டது ஒண்ணு என்கிற தத்துவம் ஸ்வாமி! என் தாயைக் காட்டிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/269&oldid=1534357" இலிருந்து மீள்விக்கப்பட்டது