பக்கம்:பாற்கடல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

லா. ச. ராமாமிருதம்


காலிகளைப் போட்டுக்கொண்டு அவள் socks அல்லது sweater ஊசிகளால் பின்னிக்கொண்டிருக்க, ஐயா வாயில் சுங்கானுடன் (pipe) இருவரும் மணிக்கணக்கில் அப்படியே உட்கார்ந்திருப்பர். இது என்ன சம்பாஷணை ? ஆனால் இருவரிடையிலும் ஏதோ போக்கு வரத்து (Communication) நடந்துகொண்டுதான் இருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் என்ன அற்புதமான நிலை! அந்த ஆள் குரலைக் கேட்டதாகவே எனக்கு ஞாபகமில்லை.

அண்ணா - என் தந்தை - பின்னால் எப்பவோ எனக்கு விவரம் தெரிந்த வயதில், பேச்சுவாக்கில் சொன்னார். அம்மியின் கணவன் பக்கா ஆங்கிலேயன். அம்மி ஆங்கிலோ இந்தியன். ஆகையால் அவர்கள் சந்ததிக்கு அவன் தாய்நாட்டில் இடம் கிடையாது. சரி, அம்மியுடன் அவன் திரும்பியிருந்தால் அவளுக்கும் அங்கு மதிப்பு கிடையாது (Oh, Mister! you don't know. Our class Consciousness is worse than your caste feeling) அம்மி அங்கே போய் அவமானப்படுவதை விட, இங்கிலாந்தைத் துறக்கத் தீர்மானித்து விட்டான்.

My land is no longer mine.

ஆணழகன். அம்மி போல் பீப்பாய் அல்லன். லேசாக வெள்ளி படர்ந்த மீசை, தலையில் Sailor தொப்பி. கழுத்தைச் சுற்றி muffler, முதல் உலக மஹா யுத்தத்தில் போர் முனையில் duty பார்த்தவன். சும்மா சுட்டுத் தள்ளியிருப்பான். எங்களுக்கு எங்களுடைய ஆண்டித்தெரு வயதில் அதுதான் முக்கியம்.

“My land is no longer mine.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/278&oldid=1534367" இலிருந்து மீள்விக்கப்பட்டது