பக்கம்:பாற்கடல்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

285


கன்னத்துள் நாக்கைத் துழாவிக்கொண்டு. அண்ணாவுக்கு எப்பவுமே ஒரு நமுட்டு விஷமச் சிரிப்பு உண்டு. இப்பவும் இருக்கு.

மன்னி என்னைத் தூக்கிக்கொள்கிறாள். நெற்றியில் விபூதி இடுகிறாள். அடுத்த தெருவில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மதில் ஓடுகிறது. பெருந்திரு கருப்பண்ணன் துணை.

என்னை நாற்காலியில் உட்கார வைத்துத் தொண்டை வழியாகப் புனல் வைத்த ரப்பர் குழாயை வயிற்றுள் இறக்கி மருந்தோ, தண்ணியோ - இல்லை, இரண்டுமோ அதனுள் ஊற்றி, என்னவோ பண்ணி - மறுக்கி மறுக்கி வாந்தியெடுக்கிறேன். நான் தின்ற மருந்து கோழையுடன் சடைசடையாக வெளியே பேஸனில் வந்து விழறது.

ரெண்டு மூணு தடவை அப்படிப் பண்ணி எனக்கு வயிறு புண்ணா வலிக்கிறது. ஆனா அவா விடறதா இல்லை. கடைசியா வாந்தியில் இனிக் கலப்படம் இல்லை என்று தெளிந்த பின்னர்தான் குழாயை ஒருவாறு வெளியே எடுக்கிறார்கள். நான் வாயில், மோவாயில், மார்பில் கொழுகொழுன்னு எச்சில் தண்ணியா ஓட ஓட அழுது கொண்டிருக்கிறேன். அதில் கொஞ்சம் அழுகைக்காக அழுகையும் கலந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

அன்று என்னை வீட்டுக்கு அனுப்பவில்லை. மன்னி தான் கட்டிலின் கீழ்த்தரையில் படுத்துக் கொள்கிறாள்.

“Wake up, Sonny, your mother has come to take you home! “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/291&oldid=1534384" இலிருந்து மீள்விக்கப்பட்டது