பக்கம்:பாற்கடல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

லா. ச. ராமாமிருதம்

வில்லை. மாமி வாட்டசாட்டமாகக் கொஞ்சம் குண்டு. இரண்டு பெரிய பெண்கள். இரண்டு பெரிய ஆண் பசங்கள்.

எங்களை கவனித்துக்கொள்ளும் காரணமாக அவர்கள் எங்கள் வழிக்கு வரவில்லை. எங்களுடன் பேச்சுத் தொடங்கவில்லை. மாமா பேரை மட்டும் கேட்டார். அதோடு சரி. புகை வராத ஒரு சுங்கானைப் பற்களுக்கிடையில் கடித்துக்கொண்டு, அவர் பாட்டுக்கு ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். குடும்பத்தில் மற்றவர்கள் தங்களுக்கிடையில் ஏதோ பேசிக் கொட்ட மடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாஷையே வேறு. துளு என்று பின்னர் அறிய வந்தேன்.

நாங்கள் கொஞ்ச நேரம் வெளியே வேடிக்கை பார்த்தோம். அம்மா பண்ணிக்கொண்டிருந்த நொறுக்குத் தீனியை மொக்கினோம். அவர்களுக்கும் கொடுக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. எங்களை ஒத்த வயதினர் அவர்கள் இல்லை. இருந்திருந்தால் கொடுக்க மனம் இருக்காது. ஆக மொத்தம் பலன் என்னவோ ஒன்றுதான்.

இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம். பசிகூட முழுக் காரணம் இல்லை. பொழுது போகவில்லை. ராச் சாப்பாட்டுக்குக் கட்டிக் கொடுத்திருந்த தயிர்ச்சாதம், எலுமிச்சம்பழச் சாதப் பொட்டலங்களைக் காலி பண்ணினோம், கையலம்பினோம். இடுப்பு நோகத் தலைப்பட்டது. எத்தனை நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது? படுத்தோம். காலை நீட்டினோம். வண்டியின் தாலாட்டில் கண் சொக்கித் தூங்கியே போனோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/296&oldid=1534393" இலிருந்து மீள்விக்கப்பட்டது