பக்கம்:பாற்கடல்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

லா. ச. ராமாமிருதம்


பாரதம் (மேலெழுந்தவாரியாக), பஞ்சதந்திரக் கதைகள் அரிச்சந்திரன் கதை எல்லாம் கேட்டது.

தாத்தா - பாணியில் இது இப்போதைய சிந்தனையில் தோன்றியது - புலியின் வால் சுழட்டல், அடவியில் நிழலோடு நிழலாக வரிக்கோடுகள் இழையும் தன்மை இருந்தது. ஒருதடவை கேட்டால் போதும். அதன் உறுத்தல் விடவே விடாது.

சித்தப்பா (அவரும் ஒன்றும் லேசுப்பட்டவர் அல்ல) சொல்கையில் பாத்திரங்கள் கண்முன் நின்றுவிடும். (Kinetic effect) தோற்றக் காட்சியின் நியாயம் அவர் சொல்லும் முறையில் தூக்கி நிற்கும். ராவணனுடைய பராக்கிரமத்தை அவரிடம் கேட்கையில், 'இந்த மஹாத்மாவைக் கொல்லவா ஒரு அவதாரம்' என்ற சந்தேகம் அந்தச் சிறுவயதிலேயே வித்து வைத்துவிட்டது. அதிலிருந்து பல்வேறு விளைவுகள், வாழ்க்கை நோக்கைப் பலவிதங்களில் பாதிக்கின்றன என்பதை யாவரும் சிந்திக்க வேண்டும்.

“நக்கீரனுக்கும் சிவனுக்கும் நடந்த சம்வாதத்தில் சிவன் எங்கே ஜெயித்தான். வன்முறையைக் கையாண்டு வழுக்கலடித்தான்.” அந்தக் கட்டத்தை விவரிக்கையில், திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவரின் செய்யுட்களின் வழவழா கொழகொழாவுடன், அதே கட்டத்தில் காளத்தி புராணத்தில் சிவப்பிரகாச சுவாமிகளின் வாக்கையும் ஒப்பிட்டுக் காண்பிப்பார். “சங்கை அறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்” என்று கீரனா கேட்டான்? எங்களுக்குள் புகுந்து கொண்டு அவன் கேட்கையில் நாங்கள் உள் விம்முவோம். அப்பா! அப்பா! அதுவன்றோ உண்மையாக வாழ்ந்த நாட்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/306&oldid=1534418" இலிருந்து மீள்விக்கப்பட்டது