பக்கம்:பாற்கடல்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

லா. ச. ராமாமிருதம்


அவளுந்தான் தவிக்கிறாள்.

எங்களுக்கு என்றும் அவள் கல்லாகவே இருக்க முடியாது. நள்ளிரவில் தைரியமுள்ளவர் கர்ப்பக்கிருகத்துள் போய் விக்கிரகத்தின் கன்னத்தைத் தொட்டுப் பாருங்கள். நனைந்திருப்பது தெரியல்லே?

நான் என்னப்பா செய்வேன்? கர்மா அப்பா. கர்மா யாரை விட்டது? வினையிலிருந்து யாரால் தப்ப முடியும்? என்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியவில்லையே, என் செய்வேன்?"

அவளுந்தான் எங்களுடன் அழுகிறாள் - ஒரேயடியாக திடீரென்று அவள் கையை விரித்துவிடாது இருந்தால் எங்கள் பெரும் புண்ணியம்.

அண்ணாவுக்குக் கன்னங்கள் ஒட்டிப்போய்க் கண்கள் குழி விழுந்துவிட்டன. உயிரைக் கோழையாகத் துப்பிக்கொண்டிருந்தார். யானை போன்ற உடல் தேய்ந்து பூனையின் நிழலாகி, அதுவும், அதுவும். திகில் எங்கள் எல்லோரையும் கவ்விக்கொண்டது.

அம்மாவைத் தவிர.

அம்மா முகத்தில் தனி ஒளி வந்துவிட்டது. களை வந்துவிட்டது. அதுமாதிரிக் களை காணக்கூடாது என்றுகூட ஒரு கட்சி உண்டு.

அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?

அம்மா பாடி நீங்கள் யாராவது கேட்டிருக்கிறீர்களோ? என்னவோ உளறுகிறேன், அந்த வேளையில் சுழலில் மாட்டிக்கொண்டு. அவள் குரலைப் பற்றி வேறு சந்தோஷமான இடத்தில் விவரிக்கிறேன். அவளுடைய பாடும் குரலில் பெண்மை இருந்தது என்று மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/312&oldid=1534437" இலிருந்து மீள்விக்கப்பட்டது