பக்கம்:பாற்கடல்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

305


போச்சு. டிபன், இது ஆகாது - அது ஆகாது. அளவுகள் கொடுரம் அடைந்தன. ராச்சாப்பாட்டுக்குக் கதவடைப்பு. இட்டிலியோ இரண்டுக்கு மேல் ஆகாது -“தோசையா?” வேண்டாண்டா, சப்தரிஷி ராத்திரி நீதாண்டா கஷ்டப்படுவே !” - நின்றால் குற்றம், உட்கார்ந்தால் அபராதம், திரும்பினால் தண்டனை. வானத்துப் பறவைக்குச் சிறகைச் சேதித்தாகிவிட்டது. ஆயுள் தண்டனை.

நோய்வாய்ப்படும் அவஸ்தையைத் தவிர, அண்ணாவின் கண்ணில் கண்டு விட்ட திகைப்பையும் மருட்சியையும் இப்போது நினைவுகூட்டிப் பார்க்கிறேன். ஏதோ ஒரு குற்ற உணர்வில் தலை குனிகிறது. அவர் அப்படிக் கஷ்டப்படுகையில், பிறர் வேளாவேளைக்கு இஷ்டப்படி தின்றுகொண்டு, வளைய வந்துகொண்டு வாழ்வதே நியாயமா? பெருந்திருவே! இதுதான் நியாயமா?

இடையில் சித்தி பிரசவம்; பெண் குழந்தை,

அப்பா லால்குடியிலிருந்து வந்து பிள்ளைப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டார். பெருந்திருவைக் கெஞ்சுகிறார். கொஞ்சுகிறார் சீறுகிறார். லால்குடிக் கோயிலுக்குப் போகாமல் அந்தப் பாவையைப் பாராமல் பிரிந்திருக்கவும் முடியவில்லை. அம்முவாத்து பலமும் அதுதான் - பலஹினமும் அதுதான். தூண்டிலில் மாட்டிக்கொண்டுவிட்ட குஞ்சுக்கு ஏதும் உதவ இயலாது. அதைச் சுற்றிச் சுற்றி வரும் தாய்மீன் போல் தவிக்கிறார். அந்தத் தலைமுறை வரை அம்முவாத்துப் பாசங்கள் பிரகடனங்களாக வெளிவரா. இந்தமாதிரிச் சமயங்களின் தவிப்பில்தான் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/311&oldid=1534436" இலிருந்து மீள்விக்கப்பட்டது