பக்கம்:பாற்கடல்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

லா. ச. ராமாமிருதம்


காரணம், பையன்களுடன் மாரடிப்பதா? ஆனால் அவருடைய தம்பிகள் வாத்தியார் வேலை பார்க்கவில்லையே! அவர்களும் ஆஸ்துமாக்காரர்கள்தாம். என் தம்பி சிவப்பிரகாசத்துக்கும் ஆஸ்துமா உண்டு. இது பரம்பரை வியாதி என்று சொல்வதற்கு இல்லை. தாத்தாவுக்கும் அவருடன் பிறந்தவர்களுக்கும் லேசாகக் கூட இதன் அடையாளம் கிடையாது. பட்டணம் போன்ற பெரிய இடங்களில் எழும் தெருப்புழுதி சுவாசப்பைக்குள் போய்விடுவதால் என்கிறார்கள். என்னவோ மூடுமந்திரம் மூடுபனியாக அண்ணாமேல் கவிந்துவிட்டது.

இன்னும் ஆஸ்துமாவுக்குப் பூரண குணம் (அதாவது உடம்பை விட்டே விரட்டல்) மருத்துவத்தில் கிட்ட வில்லை என்றே தெரிகிறது. இப்போதாயினும் ஊசிகள், மாத்திரைகள் சமயத்துக்கேனும் உதவ இருக்கின்றன. அறுபது வருடங்களுக்கு முன்னால் அது போன்ற பரிகாரங்கள் ஏது?

அண்ணாவுக்கு வந்த மும்முரம் மாபாரதம். அந்த உடல்வளம் எப்படி? அப்படி நேற்றைக்கும் இன்றுமாகக் குலைந்தது? விலாவில் கோணி ஊசியால் கோத்து வாங்கல் போன்ற இழுப்பு. (மேல், கீழ்) உள்ளங்கைகளிடையில் எலுமிச்சம் பழம்போல் ஆளைக் கசக்கிப் பிழிந்தது. சளியின் கல் கல் சப்தத்தில் வீடே அதிர்வது போல் எங்களுக்குத் தோன்றும்.

விடியற்காலை, சரியான பனிக்காலத்தில் குளிர்ந்த ஜலத்தில் ஒருநாள் கூடக் குளிக்கத் தவறாத மனுஷன், இப்போது சேர்ந்தாப்போலக் குளியலுக்கு முழுக்குப் போட வேண்டி இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? முழுக்கு குளியலுக்கு மட்டுமா? வழக்கப்படி உணவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/310&oldid=1534435" இலிருந்து மீள்விக்கப்பட்டது