பக்கம்:பாற்கடல்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

303


தோன்றியதும் இல்லை; அவருக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கும் மந்திரியாகவும் அம்மா அமையவில்லை. எப்படிப் பார்த்தாலும் எங்கள் குடும்பம்தானே பெரிசு. அண்ணாவுக்கு முப்பத்துஇரண்டு, முப்பத்து மூன்று வயதுக்குள் நாலு குழந்தைகள்.

சம்பளத்தையும் வருமானத்தையும் அண்ணா அப்படியே சித்தப்பாவிடம் கொடுத்துவிடுவார். சித்தப்பாதான் நிர்வாகம். இப்போது சிந்தித்துப் பார்க்கிறேன், எங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை இந்நாளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமபத்தகுந்ததாகக்கூட இல்லை. ஒருவர் நாணயத்தை ஒருவர் சந்தேகிக்கத் தோன்றியது கூட இல்லை. நிர்வாகஸ்தனைச் செலவுக்குக் கணக்குக் கேட்டதும் இல்லை. அதனால் அநியாயங்கள் நடக்கவும் இல்லை. அடிப்படைக் காரணம் பாசம் என்றுகூடச் சொல்லமாட்டேன். பெரிய கைகள் (தாத்தா-பாட்டி) இருக்கிறவரை - ஊரில் இருந்தாலும் சரி, இங்கே இருந்தாலும் சரி, அவர்களிடம் இருந்த ஒரு அத்து, மரியாதைதான். வால்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எதிர்ப்பில் சுழலக்கூடத் தைரியம் கிடையாது. தவிர யாரும் தனி பாவனையாக நினைக்கவில்லை. எல்லோரும் ஒரு குடும்பம். அதுவும் இது பெருந்திருக் குடும்பம். இங்கே வஞ்சனைகளுக்கே இடம் கிடையாது.

ஆனால் இந்த வாழ்க்கை திருப்பம் காணும் வேளை வந்துவிட்டது. மத்தியானம் வரை பொன்னுருகக் காய்ந்து கொண்டிருந்த வெயில் திடீரென்று மறைந்து மேகங்கள் எங்கிருந்தோ திரண்டு வந்து கவிழ்ந்து கொண்டன.

அண்ணாவுக்கு ஆஸ்துமா கண்டுவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/309&oldid=1534434" இலிருந்து மீள்விக்கப்பட்டது