பக்கம்:பாற்கடல்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

355


ஆனால் ‘ஈ ஜகமுலோ திக்கெவரம்மா' அதன் கண்ணீருடன் இன்று விடிகாலை என்னின்று வெளிப்படுவதற்கு ஆலத்தூர் சகோதரர்களின் விற்பன்னம் அடிப்படையில்லை. இந்த சாஹித்யத்தின் சுந்தர வடிவுக்கு ஏற்கெனவே அடிமையாகிவிட்டவன் என்பதைத் தவிர அவர்களுடைய சங்கீதத்தில் விவகாரம் அதிகம் என்று அவர்கள் ஏற்கெனவே அடைந்திருக்கும் பிரசித்தி தவிர, அவர்களுடைய மற்ற கலை நுட்பங்களை ஆராய நான் அருகன் அல்லன். நான் சொல்லிக்கொள்வது எல்லாம் என் சொந்தப் பரவசம். இந்த உள்மேனித் தந்திமீட்டல், நெஞ்சின் நெக்குருகல், சர்க்கரை பொம்மை உள்விண்டு, நானே எனக்கு இலாது போவதுபோல் என்னுடைய உள்கரையல், இந்த இன்ப வேதனை, இந்த பயங்கரத்தை ஆயிரம் வர்ணித்தாலும் எப்படிப் பிறருடன் பங்கிட்டுக் கொள்ள முடியும்? ‘திக்கெவரம்மா!‘ தொண்டையில் பால் பொங்குகிறது. இதோ வழிந்து வழிந்து மேலே வந்துவிடும்போல் தவிக்கிறேன். துக்கம் அடைக்கிறது. உண்மையில் துக்கமா அது?

“இல்லை! இல்லை! இல்லை!”

”ஆமாம்! ஆமாம்! ஆமாம்!”

பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர்மறுப்புக்கள் ஒன்று இழைந்து ஒரு உண்மை.

மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்து கொண்டே இருக்கும் பல கோடி, கோடானு கோடி உயிர்ச்சுக்கல்கள் நாம்.

In the beginning there was God, the holy Ghost and the word.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/361&oldid=1534636" இலிருந்து மீள்விக்கப்பட்டது