பக்கம்:பாற்கடல்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

லா. ச. ராமாமிருதம்


ஆதிபகவனின் ஆனந்தக் கூத்தில் டமருகத்தினின்று ‘டம டம டமரு’ வெளிப்பட்டது முதல் ஒலி.

கால் கட்டைவிரல் நுனியை அழுத்தி அவன் ஆடும் பேய்க்கூத்து கடையும் புயலில் கடல் பொங்கிக் காற்று அலைந்து புயல் பொங்கி, சராசரங்கள் குலைந்து நகர்ந்த அசைவுகளின் ஓசையின் அணுத்திரள் ஒலி. மோகனக் கடல் பொங்குகிறது. ரீம். ரீம் - க்ரீம் க்ரீம் - க்ரோம் க்ராம் - ஓம், ஓம், ம் ம் ம் ம அம்மா. பிரணவம் முதலா? பிராணன் முதலா?

ஓம் முதலா? அம்மா முதலா? பிரணவத்தின் அக்ஷரங்கள் ’அம்மா’ எனும் ஆதி வீறலுள் அடங்கி இருக்கின்றன. கிரஹங்களை அதன் அதன் இடம் தடுமாறாமல் இழுத்துப் பிடிக்கும் விசையின் இசை the music of the spheres - கம்பீர நாட்டை, புவன காணமே ’அம்மா!’

ஞானம், அஞ்ஞானம், பிரஞ்ஞானம், விஞ்ஞானம், அலசல், உளைசல், கடைசல், நான் யார்! யார் நீ? நான் போ. நீ வா. யாம் அறிந்த மொழிகளில் ’அம்மா’ தான் முன்மொழி, என் மொழி, எவர் மொழியும். மற்றவையெல்லாம் ’அம்மா’வின் எதிரொலி. அவள் அகண்ட வயிறுள் அடங்கிப்போன அஞ்ஞானங்கள் தான். ஆம், பிறந்த நாள் முதலாய் என்னென்னவோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்னத்தைக் கண்டுவிட்டோம்? ’அட அசடே!’ அவள் உதட்டோரப் புன்னகைக் குமிழ் அடையக்கூட நாம் கண்டவையெல்லாம் காணாது.

ஆம், இதற்கெல்லாம் இங்கே என்ன இடம்? பின்னால் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ஆனால் என்னை இப்படியெல்லாம் சொல்லச் சொல்கிறதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/362&oldid=1534637" இலிருந்து மீள்விக்கப்பட்டது