பக்கம்:பாற்கடல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

லா. ச. ராமாமிருதம்


“பெருந்திரு ஸன்னதிக்குப் போற வழியிலே நெனப்பில்லாமல் கிடந்தார்”

”ராமசாமி! ஐயாவுக்கு நாடி விழுந்துடுத்தடா !”

அத்தைப்பாட்டியின் அபயக்குரல் கேட்டு அப்பா அதான் தாத்தா திண்ணையிலிருந்து ஓடிவந்தார். அதுவரை ஐயா வந்ததுகூட அவருக்குத் தெரியாது. பாட்டு நோட்டில் அவ்வளவு ஆழ்ந்திருந்தார்.

அத்தை, ஐயாவைத் தோளில் சார்த்திக் கொண்டாள். ஐயாவுக்குக் கண்கள் செருகின.

”ஐயா என்ன ஆச்சு?”

ஐயாவுக்குத் தொண்டை ஒரே அடியாய்க் கம்மிப் போச்சு, அவர் வாய்க்குச் செவி வைத்துக் கேட்டால் ஏதோ பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன்னால், பதினெட்டாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து ஒரு குரல் தீனமாக வந்தது.

“பெருந்திரு சன்னிதானம் வாசற்படியில் படுத்திருந்தேனா, வெடுக்குனு முழிப்பு வந்தது. உள்ளூர ஏதோ உஷார் சிலிர்ப்பில் வர முழிப்பு எதிரே யாரோ நிக்கறா. உடம்பில் அத்தனை உறுப்புகளும் விழிச்சுண்டு பதறி எழுந்து உட்கார்ந்தேன். யார் இது? எப்படி வந்தாள்? அகல் சுடரில் உருவம் தெரிஞ்சது.

சிவப்புப் பட்டுப் பாவாடை. மேலே பச்சைப் பட்டுத் தாவணி. தோளில் பச்சைக்கிளி.”

தாத்தா கை, வாய் பொத்திக்கொண்டது. ”நேத்தைய கடைசி அலங்காரம், ஜவுளிக்கடை ஜம்புநாதன் செட்டியின் அபிஷேகம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/76&oldid=1533310" இலிருந்து மீள்விக்கப்பட்டது