பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 153 நடைமுறை. இந்தத் திங்களாகிய கண்ணாடியோ இருபுறமும் முகம் பார்க்கத் தெரிந்ததாம். இந்தக் காலத்தில் திங்களைப் பற்றி அறிந்துள்ள நிலையை அந்தக் காலத்தோடு ஒத்திட்டுப் பார்த்தலாகாது. கின்னரம் மயங்கும் : மங்கையர், கண், காதை நோக்கிச் செல்லாமலும், வாயில் முறுவலிக்கும் பற்கள் தெரியாமலும், கூந்தல் அவிழ்ந்து விடாமலும், புருவங்கள் நெரியாமலும், கழுத்திலிருந்து வாயின் வழியாக வெளிவரும் பாடலுக்கு ஏற்பக் கைகளால் யாழ் நரம்பை மீட்டிப் பாடும் பாடலைக் கேட்டுக் கின்னரம் என்னும் பறவை மயங்கும். 'செங்கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல் தோன்றா, பொங்கிருங் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா, பூவின் அங்கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும் மங்கையர் பாடல் கேட்டுக் கின்னரம் மயங்கும் மாதோ' (9) உலகில் பாடுபவர் சிலர், கண்டபடிக் கண்ணைச் சுழற்றுதலும், பல் இளித்துச் சிரித்தலும், கூந்தலை அவிழ விட்டும், புருவங்களை நெரித்தும், யாழிசைக்கும் பாடலுக் கும் பொருத்தம் இல்லாமலும் பாடுவர். இத்தகைய உறுப்பின் சீர்கேடு (அங்கசேஷ்டை) பாடகருக்குக் கூடாதது. அடிபிடி சண்டை போடும்போது அல்லவா கூந்தல் அவிழும். கண்ணும் பல்லும் புருவமும் நிலை மாறுவது பாடும்போது தேவையில்லை - ஆடும்போது தான் தேவை. சிலர் பாடத் தொடங்கினால், ஆடவும் செய்வர்; இருந்த இடத்திலிருந்து சிறிது சிறிதாக அப்பால் நகர்ந்து வந்து விடுவர். கோணக் கோண இழுப்பு வந்தது போன்ற தோற்றம் எடுப்பர்.