பாலஸ்தீனம்
1. பூகோளமும் சரித்திரமும்
வேகமாகச் செல்லும் ஒரு மோட்டார் வண்டியில் ஏறிக் கொண்டு, இரண்டு மணி நேரம் நீங்கள் பிரயாணஞ் செய்வீர்களானால், பாலஸ்தீனத்தை வடக்கும், தெற்குமாகச் சென்று பார்த்து விடலாம். நில வீஸ்தீரணத்தில் மிகச் சிறிய பிரதேசந்தான். ஆனால், முக்கியமான இடத்தில் இருப்பதினாலேயே, எல்லாருடைய பார்வையும் இதன் மீது விழுந்திருக்கிறது.
பாலஸ்தீனம் ஒரு முச்சந்தியில் இருக்கிறது. ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைத்து வைக்கிற ஒரு பாலம் மாதிரியுள்ளது இந்த நாடு. அராபியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூன்று மதத்தினரும், தங்களுடைய புனித நாடாக இதனைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டன், ஜெர்மனி, இத்தலி ஆகிய மூன்று வல்லரசுகளும் இந்த நாட்டின் மீது கண்ணோட்டம் செலுத்தி வருகின்றன. கீழ் நாட்டையும், மேனாட்டையும் சேர்த்து வைக்கிற ஆகாய விமான வழிகள், கடல்