பக்கம்:பாலும் பாவையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று காலை மணி எட்டு இருக்கும். அகத்தியர் விழா, கோழையை வீரனாக்கும், மிருகத்தை மனிதனாக்கும். மனிதனை அமரனாக்கும் பாரதியார் பாடலுடன் ஆரம்பமாயிற்று. தமிழை மறுபடியும் தனி உடமையாக்கப் பார்க்கும் தனித் தமிழ்ப் பண்டிதர்களும், இலக்கியச் சனாதனிகளும் அந்தப் பாடலைப் பாடி முடிக்கும் வரை தாங்கள் காது களைப் பொத்திக் கொண்டிருந்தனர். கேட்டால் புரிந்து விடுமோ, உள்ளத்தைத் தொட்டு உலுக்கிவிடுமோ, உணர்ச்சி வெள்ளத்தைப் பெருக்கி அகத்தின் அழுக்கை அகற்றிவிடுமோ என்று அவர்களுக்குப் பயம்! கனகலிங்கம் அவர்களைப்போல் பதுங்கவுமில்லை; பயப்படவுமில்லை! விழாப் பந்தலுக்கு வெளியே அவன் புத்தகங்களைத் தரையில் பரப்பிவிட்டு, பாரதியாரின் பாடலை கண்களில் நீர் மல்கக் கேட்டுக் கொண்டிருந்தான். "ஏம்ப்பா!' கனகலிங்கம் திரும்பினான். அவனுக்கு எதிரே தொந்தி பெருத்த மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் குறைந்த பட்சம் ஒரு நூறு பேருடைய உழைப்பையாவது அவர்களுக்குத் தெரியாமல் தொடர்ந்து திருடித்தின்று கொண்டிருப்பவர் போலத் தோன்றியது. அடியில் தும்பைப் பூவை நிகர்த்த கிளாஸ்கோ’ வேஷ்டி, மேலே சிலுசிலுக்கும் பட்டுச் சட்டை கழுத்திலிருந்து கால் வரை நீண்டு தொங்கிப் பளபளக்கும் சரிகை உத்தரீயம்; சண்டைக்குச் சிண்டைக் கொடுக்காமலிருப்பதற்காக வெட்டிக் கொண்டிருந்த ‘லம்மர் கிராப்; காதில் வைரக் கடுக்கன்; பயங்கர மீசைஆகியவை யெல்லாம் சேர்ந்து திடீர்ப் பிரமுகர்’ என்று எடுத்துக் காட்டின. அவருடைய கை விரல்களில் மின்னிக்கொண்டிருந்த வைர மோதிரங்களுக் கிடையே பழைய ஆங்கிலப் பத்திரிகையொன்று பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தது! கனகலிங்கம் அவரை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே, ‘என்ன வேண்டும்?” என்று கேட்டான். வந்தவர் கீழேகிடந்த புத்தகங்களை யெல்லாம் ஊடுருவிப் பார்த்துவிட்டு, உங்கிட்ட