பக்கம்:பாலைக்கலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கலித்தொகை மூலமும் உரையும் பலவாறு பக்குவமாக அமைக்கப்பட்ட படுக்கையிலே, இருவரும் ஒன்றாகத் துயில்வீர்களே அவ்வேளையில், அவள் படும் வேதனையை அறியாமல், நீ சற்றே விலகிப் படுத்தாலும் அதற்கே புலம்பிக் கொண்டு வருந்துபவள் அவள். நீ பிரிந்து செல்வதைக் கேட்டால், நெஞ்சம் உடைந்து, ஒளி கெட்டு, உயிர் வாழ்ந்து இருப்பாளென்றோ நினைக்கின்றாய்? அவள் இறந்தே போய்விடுவாளே! "அவளை நீ வெறுத்துப் பிரியவில்லை. பொருள்முயற்சியை நினைந்துதான் பிரிகின்றாய்” என்று கேட்டாலும், அவள் என்ன பாடுபடுவாள்? மிகவும் பெருமை பொருந்திய சாயலை யுடையவள் நின் மனைவி. நகையாட விரும்பிய நீ, ஒரு நாள் துன்பம் விளைவிப்பது போலக் காட்டிப் பிரிந்து நெடுநேரம் அவளருகே வராதிருந்தாலும், அறவே அவளைக் கைவிட்டு விட்டாயோ என்று அஞ்சிக் கலங்குபவளாயிற்றே? உண்மையாகவே நீ பிரிந்து செல்வதைக் கேட்டால், கண்கள் நீர் பொழிய, உறக்கம் கொள்ளாமல், உன் நினைவால் துயரப் பட்டுக் கொண்டும் அவள் உயிர் வாழ்ந்திருப்பாளோ? அந் நிலையே இறந்தல்லவோ போய்விடுவாள்! அவள்பால் மிகவும் கருணையோடு-நடந்துகொள்பவள் நீயாயிற்றே! அவள் உள்ளத்தில் இருள் சூழச்செய்யும் நோக்கம் எதுவும் இடையிலே இல்லாமற்போயினும், உன் அருள்நோக்கம் சற்றே குறைந்தால், அதற்கே பொறுக்காது துயரங் கொண்டு நெஞ்சம் அழிபவளாயிற்றே அவள்! பொருளாசை கொண்டு நீ பிரிந்து போகின்றாய் எனக் கேட்டால், உன்னை மயக்கும் அவள் கண்ணழகு கெட்டு, மையல் தாளாது, மிகுதியும் வாடிக்கிடப்பா ளென்றோ நினைக்கின்றாய்? அவள் அந்நிலையே இறந்தன்றோ போய்விடுவாள்! - 'அணிகள் பல பூண்டவளே! செயல் ஆற்றலை விரும்பி நீ பிரிந்து சென்றால் இவள் உயிரை விட்டுவிடுவாள்' என்று, உன் நிலையினை யான் மேற்கண்டவாறு உன் கணவனிடம் எடுத்துக் கூறினேன். போவதற்குத் தயாராக, ஒளி வீசும் வேலினையும் கையிலே கொண்டு நின்ற அந்நெடுந்தகை, அப்பொழுதே நீண்ட வழிநோக்கிச் செல்லும் தன் நினைவை ஒழித்து விட்டான். இன்னும், ஏன் நின் வளைகள் கழன்று வீழ்கின்றன? அவை இனிப் பிடிப்பாக விளங்கட்டுமே! விளக்கம்: பாலையின் வெம்மைக்குக் கூறிய உவமானங்கள் நீ பிரிவதால் ஏற்படும் வெம்மையால், இவளும் அவ்வாறு நிலை கெடுவாள்' எனக் குறிப்பாக உணர்த்துவனவாகும். இளமை, பருவத்தையும்; சினை, இன வளர்ச்சியையும்; செல்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/34&oldid=822025" இலிருந்து மீள்விக்கப்பட்டது