பக்கம்:பாலைக்கலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலித்தொகை மூலமும் உரையும் தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ? என ஆங்கு, - 'அணை அரும் வெம்மைய காடு எனக் கூறுவீர்! கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை, பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப் பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே? விளைநிலங்கள் ஈரப்பசையற்று வறண்டு போயின. சினங்கொண்டு தீமை விளைவிப்பதுபோல ஞாயிற்றின் கதிர்களும் அனலைச் சொரிகின்றன. கோடைக்கு அஞ்சி மலைச்சாரலுக்குச் சென்றாலாவது குளிர்ந்திருக்கும்’ என்று எண்ணியவாய், வெம்மை தாக்க ஆற்றாவாய் வருந்திவரும் யானை இனங்களைத் தாங்கும் மணி திகழுகின்ற சிறந்த மலையும், கோடையால் வெம்பிவிட்டது. பூமியின் உள்ளே அகழ்ந்த நீர் நிலைகளும் நீரற்றுப் புழுதிப்பட்டுப் போய்விட்டன. அழல் தூங்குவது போலக் கொடிய வெம்மையே எப்புறமும் பரந்து கிடப்பதுவே, அந்தப் பாலை நிலத்து வழியின் இயல்பாகும். "கிளியின் பேச்சுப் போலப் பேசுபவளே! மழைத்துளி களையே கண்டறியாத அக்கானலின் வெம்மையிலே எவ்வாறு நீ நடந்து வரப்போகின்றாய்?" என்கின்றீர். வரம்புகட்டிக் கூறவியலாத நிலையாமையினையுடைய காற்றைப் போன்று விளங்குவது வாழ்நாள். அதனிடையே, நாம் கூடிவாழும் இன்ப நாளிலே, உம் மார்பையே எனக்குத் தஞ்சம் என்று யானும் ஏற்றுக்கொண்டேன்! அத்தகைய யான், இனி உம்மைப் பிரிந்து துன்பமுற்று அழிவேனோ? இதழ்க்கடையிலே அமுது போன்ற வாயூறல் ஊறும் பல் வரிசையுடையவளே! நீ உண்ண நினைத்தால் அங்கு உண்ணுதற்கு நீருங் கிடையாதே? என்று அறநெறியைக் காட்டிக் கூறுவீர். ஆற்றுநீர் கழிந்து போவதுபோலக் கழிந்துபோகும் இந்த இளமையினை, நுமது நெஞ்சமென்கின்ற தெளிவின் தன்மைப்படியே பெற்றிருப்பவள் யான். அத்தகைய யானும், நீர் பிரிந்தபின், வருந்தி, இங்கேயே தனித்துக் கிடப்பேனோ? ‘சிறந்த அழகும், மூங்கிலையும் வென்ற தோள்களும் உடையவளே! நீ வந்தால் தங்கிக் களைப்பாற நிழல்தரும் மரம் ஒன்றேனும் அவ்வழியில் கிடையாதே' என்று சொல்லுவீர். நீண்ட நிழலடியிலே துளிர்த்த தளிரானது பசலையுற்று நிறமாறிக் கிடப்பதுபோல, நீர் பிரிந்தால் என் உடலும் பசலை பாய்ந்து அழிந்துவிடும். இதனை அறிந்தவளான நான், உம் தாள்நிழலைக் கைவிட்டு நீங்குவதையும் நினைப்பேனோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/56&oldid=822049" இலிருந்து மீள்விக்கப்பட்டது