பக்கம்:பாலைச்செல்வி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நகை குறித்தனரே! இல்லற வாழ்வு மேற்கொண்டு இன்ப உலகில் வாழ்ந்து வந்தனர் இளங் காதலர் இருவர். அவர் இருவருள், அவன் மனைவி அழகின் திருவுருவம். அவள் உள்ளம் அன்பின் உறைவிடம். தாமரை மல்ரின் நடுவில், அதன் கொட்டையைச் சூழ்ந்திருக்கும் பூந்தாதுகளையடுத் திருக்கும் இதழ் போலும் மென்மைய அவள் மலரடிகள். மழைத்துளி வீழ்ந்து மாசு நீங்கிய மாந்தளிர் போன்றது அவள் மேனி. அகநலத்தைப் புறங்காட்டும் பேரொளி யுடையது அவள் நெற்றி, வளை ஒலிக்கும் கைகள்; கேட்க இனிக்கும் கிளிமொழி அவள் வாய்ச் சொல். இத்தகு நலமுடையாள், சிங்கத்தின் வடிவம் சித்திரிக்கப் பெற்ற கால்கள் மேல், அமர்வார் அசைவிற்கேற்ப ஆடிக் கொடுக்குமாறு ஆக்கிய அழகிய கட்டில்மீது, அன்னத்தின் துரவியால் ஆய படுக்கையில் கிடந்து உறங்கும் உயர்ந்த நிலையுடையாள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/101&oldid=822101" இலிருந்து மீள்விக்கப்பட்டது