பக்கம்:பாலைச்செல்வி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 புலவர் கா. கோவிந்தன் கழிந்துவிடுமோ என்ற ஏக்கத்தால், அவள் உடல் தளர்ந்தது. உறுப்புக்கள் மெலிந்து தம் அழகிழந்தன. இன்பம் அவளை விட்டகன்றது. துன்பம் தொடர்ந்தது. அந்நிலையில் அவளைக் கண்டு, அவள் துயர்க்காம் காரணம் இஃது என அறிந்து கொண்ட அப் பெண்ணின் தோழி, அவள் கணவனைத் தேடிச் சென்று கண்டாள். கண்டு, 'அன்ப! பதினாறு கலைகளுள் ஒன்றையும் ஒழியாது பெற்றுப் பேரொளி வீசும் முழுத்திங்கள் என்றும் அந்நிலையிலேயே நிற்பதில்லை. அந்நிறைவு, பின்னர், நாளுக்கு ஒரு கலையாகத் தேய்ந்து தேய்ந்து போக, இறுதியில் ஒளி குன்றி அழியும் என்பதை நீ உணர்வை. அதைப்போல, நின் கண்கள் கண்டு மகிழுமாறு, இவள் குறைவற நிறைந்து நிற்கும் இப்பேரழகு, என்றும் அவளைப் பிரியாது, அவ்வாறே பொருந்தி நிற்கும் என எண்ணற்க. நீ பிரியின், நின்னைக் காணாக் கலக்கத்தால், அவ்வழகு நாள்தோறும் குறைந்து குறைந்து இறுதியில் அறவே அழிந்து போய் விடும். "அன்ப! தண்ணிர் நிறைந்து விளங்கும் ஒரு தாமரைப் பொய்கையில், தாமரை அரும்புகள், இலைகளைப் போல் அத் தண்ணிர் அளவில் படிந்து கிடக்காது, அவ்விலைகளைக் காட்டிலும் சற்றே உயர்ந்து சிறந்து தோன்றும். ஆனால், அவற்றின் சிறப்பெல்லாம் அவை மலரும்வரையே. மலர்ந்தவுடனே, அழிவு அவற்றைப் பற்றிக் கொள்ளும். மலர்ச்சி, அவற்றிற்கு மாண்பு தருமாயினும், இறுதியில், அம் மலர்ச்சியே அவற்றின் கூற்றமுமாகிறது. அதைப் போல், களவொழுக்க இன்பத்தால், சிறிது சிறிதாக வளர்ந்து வந்த காதல் எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/136&oldid=822139" இலிருந்து மீள்விக்கப்பட்டது