பக்கம்:பாலைச்செல்வி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி స్థి 15 பணிந்தொழுகும் மாணவன் போல், மதம் அடங்கி மண்டியிடுவது போன்று, "நீ பிரியின், நின் மனைவி உயிர் வாழாள் பிரிவுத் துயர் அவளுக்கு அத்துணைக் கொடிதாம்!” என்று தோழி கூறிய தன் மனைவியின் துயர்நிலைக் காட்சியைத் தன் அகக்கண்ணால் கண்ட அக்கணமே, பொருள் தேடிச் செல்லும் தன் முயற்சியை அறவே கைவிட்டான். அவன் முடிவு கண்டு மகிழ்ந்தாள் தோழி. மகிழ்ச்சி தரும் அச் செய்தியை, அவன் மனைவிக்கும் ஓடி உரைத்தாள். அதுகேட்ட அப்பெண், "இத்துணையும் கூறி, இவ்வளவும் எடுத்துக்காட்டி, என் உள்ளத்தில் இன்பம் சுரக்க வழி செய்த நின்னை எங்ங்னம் வாழ்த்துவன்!" எனக் கூறி அவளைப் பாராட்டினாள். அது கேட்ட தோழி, "இதில் என்னை வாழ்த்துதற்கு என்னுள? அவன் போகாது நின்றது, என்னாலோ, என் அறிவுரைகளாலோ அன்று. நான் அவ்வளவு கூறியும், தன் முயற்சியைக் கைவிட மறுத்த அவன், 'உன் பிரிவால், அவள் வருந்துவாள்; வாழாது உயிர் விடுவள்!” என்று கூறிய நின் துயர்நிலை கேட்டன்றோ போகாமைக்கு இசைந்தான். ஆகவே அவனைப் போகாது தடுத்தது உன் அன்பே என் அறிவுரையன்று. ஆகவே வாழ்த்துதற்கு உரியது, நீவிர் இருவீரும், ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே, வாழ்க அவ்வன்பு!” என வாழ்த்தித், தன் தொண்டின் சிறப்புக் கண்டு, செருக்குக்கொள்ளாது, அதை மறைத்துக் காட்டி மாண்புற்றாள். அம் மாண்பினை உரைப்பது இப்பாட்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/17&oldid=822176" இலிருந்து மீள்விக்கப்பட்டது