பக்கம்:பாலைச்செல்வி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இல் புலவர் கா. கோவிந்தன் இன்பமும், மகிழ்ச்சியும் தரும் நின்னை மதியாது, பொருளே எல்லாம் என அதை மதித்து, அப்பொருள் கொணர்வான் வேண்டிப் போய்விட்டார் என்று கூறின், அவள் நிலை என்னாம்? உள்ளம் உடைந்து, உடல் நலம் இழப்பள்; கண்கள் நீர் மல்க, உறக்கம் ஒழிந்து உறுதுயர் கொள்வள்; காண்பார் கண்ணிற்கு விருந்தளிக்கும் அவள் பேரழகு பாழாம்; அவள் அறிவும் பிறிதாம்; அவள் உயிரும் பிரியும். ஆகவே, அன்ப ! பிரிந்து போவது நின் பெருந்தன்மைக்குப் பொருந்தாது !’ என்று கூறி முடித்தாள். தோழி கூறியன கேட்டான் அவ்விளைஞன். உடனே, தான் செல்லும் அந் நீண்ட வழியில், தனக்குத் துணை யாகுக எனக் கையில் ஏந்தியிருந்த, மாசுபோகத் துடைத்து, நிலவு போல் ஒளி வீசும் நீண்ட வேலை ஒருபால் வீசி எறிந்தான். தன் போக்கையும் மாற்றிக் கொண்டான். போகேன் என உறுதி கூறினான். அந்நல்ல செய்தியைச் சொல்ல, அவன் காதலிபால் விரைந்தாள் தோழி. ஆனால் அதற்குள்ளாகவே, அவன் பிரிவுச் செய்தியை எவ்வாறோ அறிந்து கொண்டு, அத்துயர் மிகுதியால், அப்பெண்ணின் உடல் தளரக், கைவளைகள் சுழன்று ஒடுவதைக் கண்டாள். உடனே அவள் அண்மையிற் சென்று, நிகழ்ந்தவற்றைக் கூறி, "நின் பொருட்டு நின் துயர் நிலை காண அஞ்சிப் பொருள் கருதிப் போவதை நிறுத்திக் கொண்டார் நின் கணவர். ஆகவே, கவலை ஒழித்துக் கவினுறுக நீ நின் உடலும் வளை கழலாவாறு பருத்து வனப்புறுமாக!” எனக் கூறினாள். அதுவே இது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/84&oldid=822340" இலிருந்து மீள்விக்கப்பட்டது