பக்கம்:பாலைப்புறா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 163

அந்த பெட்டிக்கு என்ன நம்பர் பூட்டு... புத்தியை கடன் கொடுத்துட்டேனே...

மனோகர் கத்தினான். 'யாரும் இங்கே நிற்கப்படாது'. ‘இதுக்குப் பேர்தான் பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு என்கிறது... சரி சரி... நான்...வண்ணாரப்பேட்டைக்குப் போயிட்டு...சாயங்காலமாய் வாறேன். எங்கேயும் போயிடாதே.'

தவசிமுத்து போய்விட்டார். பொறுத்தவர் பூமியாள்வார் என்று, தனக்குத்தானே எப்போதோ கேட்டதை, அப்போதும் நினைத்துக் கொண்டு போய்விட்டார். மனோகரும், கல்லுக்குள் தேரைபோல் போர்வைக்குள் முடங்கிக் கொண்டான். சென்னை மீனாட்சி, மீண்டும் மதுரைக்குப் போய்விட்டாள். இந்தக் கிருமிகள், வெள்ளை அணுக்களை மட்டுமா அழிக்கின்றன. பாசம், பந்தம், பணம், உறவு, எல்லாவற்றையுமே அழிக்கின்றன. உள்ளே அணு அணுவாய் அழிக்கின்றன என்றால், வெளியே ஒரேயடியாய் அழிக்கின்றன.

மனோகர் அழவில்லை... சிரிப்பாய் சிரித்தான். வெடிச்சிரிப்பாய்... வெறுஞ் சிரிப்பாய்... வெறுமை சிரிப்பாய்... சிரித்தான். சிரிக்கச் சிரிக்க அழுகை. அழ அழசிரிப்பு. கண்ணதாசா, ஒன்வாயில் சர்க்கரை போடணும் சாமி.

மனோகர், கட்டிலோடு கட்டிலாய் ஒடுங்கினான். போர்வையை இழுத்து, உச்சி முதல் பாதம் வரை போர்த்திக் கொண்டான். ஒரே இருட்டு... அவனுக்குப் பிடித்தமான இருள்.

மனோகர், தான் எடுக்காமலே கீழே விழுந்த போர்வையைப் பார்க்க கண்ணைத் திறந்தான். அவனுக்கு முன்னால், நான்கைந்து பேர்கள்... அவர்களில் ஒருத்தி பெண். இருபது வயதிருக்கலாம். நீல நிறப் பேண்ட்..., முழங்கைவரை மடிக்கப்பட்ட ஊதாநிற முழுக்கைச்சட்டை... ஆச்சர்யமாய் பார்த்த மனோகர், எழுந்து உட்கார்ந்தான். அதற்குள், அவன் பக்கத்தில் உட்கார்ந்த உயரமான இளைஞன், எடுத்த எடுப்பிலேயே இப்படி பேசினான்.

"கவலைப்படாதடா... மனோகர்... நாங்க அந்நியர்கள் இல்ல. அன்னியோன்யமானவர்கள். ஒன்னை மாதிரியே எய்ட்ஸ் கிராக்கிகள்; ஒன்னொட நண்பர்கள். அதனாலதான் ஒன்னை ‘டா’ போட்டு கூப்பிட்டேன்டா... நீ எதுவும் சொல்ல வேண்டாம்... எங்களுக்குத் தெரியும்... இனிமேல் நீ பிள்ளைப்பூச்சி இல்லே. தேள். விஷம் பிடிச்சி கொட்டுற தேள். வாழ்வது வரைக்கும் சந்தோஷமா வாழப்போற சராசரிக்கும் மேலான மனிதன். கவலைய விடுடா மச்சி. இனிமேல் நீதான் நாங்க, நாங்கதான் நீ."

மனோகர், அவர்களை ஆறுதலோடு பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/163&oldid=1405200" இலிருந்து மீள்விக்கப்பட்டது