பக்கம்:பாலைப்புறா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 பாலைப்புறா

குப்பம்மா, எதேச்சையாக நீண்ட கரங்களை மடக்கிக் கொண்டாள். இந்தப் பணத்தை வாங்குவது, இந்த ‘பெரிசு' சொன்னதை நிரூபிப்பதாகிவிடும். அவளும், மனதைப் பொருத்த அளவில் பணக்காரிதான்; குப்பம்மா அந்த பணக்கட்டை மனோகரிடம் திணித்தபடியே விடை பெற்றாள்.

‘ஒன்மனசே போதும் தம்பி. நீ நல்லா இருக்கணும்’ ‘மீனாட்சிய அடிக்காதம்மா' ‘அடிக்க மாட்டேம்பா.. அடிக்கவே மாட்டேன்’ ‘எப்போதாவது... அவள தொலைவுல நின்னு காட்டும்மா...’

‘ஆகட்டும்பா... ஆகட்டும்பா...’ ‘மீனுக் குட்டி...நானும் கலைவாணியும், சித்ரவதை படாம சீக்கிரமா போக வேண்டிய இடத்திற்கு போகணுமுன்னு சாமி கும்புடம்மா... நீ... கும்பிட்டா பலிக்கும்மா...’

‘கும்புடுவாப்பா... கும்புடுவாள்...’ குப்பம்மா, முந்தானையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். அங்கே நின்றால், அழுகை, கூட்டத்தைக் கூட்டிவிடும் என்று நினைத்தவள் போல், மான்குட்டியாய் மருண்ட மீனாட்சியை உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டு, வாசலைத் தாண்டி ஒரே ஒட்டமாய் ஒடினாள். அவனுக்கு கையாட்டியபடியே திரும்பித் திரும்பிப் பார்த்த மீனாட்சிக்கு, பதிலுக்கு கையாட்டியபடியே, மனோகர் உடலாட நின்றான். கண்ணின் வேர்வை உடம்பின் ஒவ்வொரு அணுவும் சிந்திய கண்ணிரில் கலந்தது. உதவிக்கு இருந்த ஒரே ஜீவனும் போய்விட்டது. இனிமேல் சொந்த ஜீவன் போக வேண்டியதுதான் பாக்கி, ஒவ்வொருவரிடமும் மரணம் தனித்தனியாய் வரலாம். அதற்காக அந்த ஒருத்தரை, தனிப்படுத்தலாமா...

மனோகர், எதுவுமே நடக்காததுபோல் நாற்காலியில், மோவாயில் கை வைத்து உட்கார்ந்த தகப்பனிடம் சீறிப் பேசினான்.

‘எனக்கு வேண்டியவங்களே போனபிறகு... இந்த வீட்ல யாரும் இருக்க வேண்டியதில்லை’

தவசிமுத்து, பதில் பேசவில்லை. கால்களைத், தரையில் தேய்த்தார். மடியில் இருந்த வெற்றிலை பாக்கை எடுத்துப் போட்டார். கைகளைக் கோர்த்தார். கண்களைச் சிமிட்டினார். இதற்கு மேல் நின்றால், கழுத்தைப் பிடித்து தள்ளினாலும் தள்ளலாம். தள்ளினாலும் போக முடியாதே... லாக்கர் நகையை வாங்கணும். கம்பெனி கொடுத்த பணத்தையும் கறக்கணும். மீராவையும் கரையேற்றிவிடலாம். பக்கத்து வயலையும் வாங்கிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/162&oldid=1405199" இலிருந்து மீள்விக்கப்பட்டது