பக்கம்:பாலைப்புறா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 161

"வர்வேன்... அண்ணாவுக்கு யாருமில்லை... வர்வேன்”. "மவளே... இன்னிக்கி... ஒனக்கு சாவடி கொடுக்கேன் பாரு...”

தாயும் மகளும், அடையாளம் தெரியாமல் ஒன்றானார்கள். கீழே விழுந்த மகளை மேலே மேலே தூக்குவதும், மேலே எழும் மகளை, கீழே தள்ளுவதுமா, குப்பம்மா இயங்கினாள். மீனாட்சியைக் கீழே கிடத்தி,அவள் முடியை காலால் அழுத்திக்கேட்டாள்.

“இங்கே வர்வியா?”.

சிறிது மெளனம்... பேசமுடியாத வலி.. பிறகு, 'வர்வேன், வர்வேன்...’ என்ற சப்தம்.

குப்பம்மாவுக்கு, இப்போது, தான் பெரிசா அல்லது மகள் பெரிசா என்று நிரூபிக்க வேண்டும் போலிருந்தது. அதோட, பெத்த நாய்னாவே மகனுக்கு வந்திருப்பது ஒட்டுவோர் ஒட்டி நோயின்னு சொல்லிட்டார். இதற்கு மேலேயும், மீனாட்சியை இங்கே விட்டுவைப்பது யாருக்குமே நல்லதுல்ல...

மகளின் தலைமுடியில் வைத்த கால் பிடியை தளரவிட்ட குப்பம்மா, மீண்டும் குனிந்து, அந்த முடிக்கற்றையை கைப்பிடியால் இறுக்கிப் பிடித்தாள். மீண்டும் மீனாட்சியை சுழல் ராட்டினமாய் ஆக்கப் போனாள். இதற்குள் மனோகர், இருவருக்கும் இடையே வந்தான். கேவிக் கேவி அழுதான். தனது தலையிலேயே அடித்துக் கொண்டான். ‘என்னை அடி’ என்பதுபோல், குப்பம்மாவின் கையைத்துக்கி, தன்தலையிலேயே அடித்துக் கொண்டான். ஆடிப் போன குப்பம்மா, மகளை விட்டுட்டு, அவனையே பச்சாதாபமாகப் பார்த்தாள். ஆனால், மனோகரோ, மீனாட்சியை தன் பக்கமாகத் திருப்பி விட்டுக் கொண்டு மன்றாடினான்...

‘அம்மா. சொல்றதைக் கேளும்மா... மீனுக்குட்டி, இந்த அண்ணன் யாருக்குமே பிரயோசனமில்லாமல், போனவம்மா...நீ நல்லா இருக்கணும்... அடம் பிடிக்காமல், அம்மா பின்னால போம்மா... இந்த அண்ணன் சாகிறது வரைக்கும், ஒன்னை நெனைச்சிட்டுக்கிட்டுத்தான் சாவேம்மா...’

மனோகர், மீனாட்சியின் கையைப் பிடித்து, குப்பம்மாவிடம் ஒப்படைத்தான். முரண்டு பிடித்த மீனாட்சியை, குப்பம்மா பக்கமாக செல்லமாய்த் தள்ளிவிட்டான். பிறகு, அப்பனைப் பார்த்தபடியே சூட்கேஸை திறந்தான். நம்பர் பூட்டு கொண்ட சூட்கேஸ் பெட்டியைத் திறந்து, நூறு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்துக் குப்பம்மாவிடம் நீட்டினான்;

‘மீனாட்சி பேருக்கு, இந்த ஐயாயிரம் ரூபாயையும் பேங்கில் டிபாசிட்டாய் போடுங்கம்மா... அவள் கல்யாணத்துக்கு ரொம்ப உதவியாய் இருக்கும்’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/161&oldid=1405198" இலிருந்து மீள்விக்கப்பட்டது