பக்கம்:பாலைப்புறா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 பாலைப்புறா

பிள்ளையாண்டானும், கலைவாணியும் இவளைக் கிட்டத்தட்ட வீட்டோடு வைத்துக் கொண்டார்கள். ஐந்தாறு வீட்டுக்காரர்கள் பார்ட் டைமாய் கொடுக்கும் பணத்தை, இவர்கள், ஒட்டுமொத்தமாகக் கொடுத்தார்கள். இதே மனோகர், டில்லிக்கோ, பம்பாய்க்கோ போனபோது, மீனாட்சிக்கு சல்வார் கமிஸ் வாங்கிட்டு வந்தது. அப்படிப்பட்ட பிள்ளையாண்டான்கிட்ட அடுக்குமாடி அம்மாக்கள், மீனாட்சியை அனுப்பக்கூடாது என்றார்கள். இப்போது கூட லேசாய் தயங்கியவளை, எட்வர்ட் சாமுவேல் அம்மாவும், மோனியோ கூனியோ, அந்த பொம்மனாட்டியும், முதுகைப் பிடித்து இந்தப் பக்கமாய்த் தள்ளிவிட்டார்கள். ஆளுக்கு ஆள் ‘மனோகர்கிட்டே இருக்கிறது மீனாட்சிக்கும், அவள்கிட்ட இருக்கிறது உனக்கும், அப்புறம் எங்களுக்கும் வரும். அதுக்குள்ளே நீயா நின்னுடு... இல்லன்னா நாங்களே நிறுத்திருவோம்’ என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார்கள் இவளும், நேற்றே மீனாட்சியிடம், இந்த பக்கம் தலைகாட்டக் கூடாது என்று ஆணையிட்டாள். குப்பம்மா, மனோகரை கோபமாகப் பார்த்தாள். "என் பொண்ண ஏய்யா அனுப்பி வைக்கல” என்று கேட்கப் போனாள். ஆனால், அந்த முகத்தைப் பார்த்ததும், வார்த்தைகள் வாய்க்குள்ளேயே சத்தியாக்கிரகம் செய்தன. இதனால், அவள் கோபம் முழுவதும், மகள் மீனாட்சி மீது திரும்பியது; தவசிமுத்து வேறு உசுப்பி விட்டார்.

‘ஏன் பேசமாட்டக்கே... திருடனுக்கு தேள் கொட்டுனது மாதிரி இருக்குதோ'..

குப்பம்மா பார்த்த பார்வையில், மீனாட்சி புரிந்து கொண்டாள். எவர் தனது காதைப் பிடித்து, கையை முறுக்கி இம்சித்தாரோ, அந்த தவசிமுத்துவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். ஆனாலும், குப்பம்மா கைகளை வளைத்து வைத்துக் கொண்டு, மீனாட்சியை கெளவப் போன போது, தவசிமுத்துவே இந்தா ஒன் மகள் என்று மீனாட்சியை, தாய்க்காரி பக்கமாய்த் தள்ளிவிட்டார்.

குப்பம்மா, மகளின் இரண்டு காதுகளையும் பிடித்து, மேலே தூக்கி கீழே போட்டாள். அவள் தலைமுடியை சுருட்டிப் பிடித்து, தரையில் இருந்து அலாக்காய் தாக்கி பிடித்து, மகளின், கால்களில், தன் கால்களால் ஒரு இடறு இடறிக் கேட்டாள்.

"இனிமேல்... வர்வியா... சொல்லு வர்வியா?”

‘வர்வேன்... வர்வேன்’.

‘அவ்வளவு திமிரா... ஒனக்கு... வரமாட்டேன்னு சொல்லு... இல்லாட்டி ஒரு கையாவது முறியாமப் போகாது... சொல்லுமே... வர்வியா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/160&oldid=1405182" இலிருந்து மீள்விக்கப்பட்டது