பக்கம்:பாலைப்புறா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 159

"யோவ். பெரிய மனுஷனாச்சேன்னு பார்க்கேன். இல்லாட்டி நடக்கிற கதையே வேற... மரியாதையா வெளியிலே போய்யா... எங்கண்ணாவ, எனக்கு பார்த்துக்கத் தெரியும்”.

தவசிமுத்து, மீனாட்சியை நோக்கி நடந்தார். அவர் பார்த்த பார்வையில் சுவரோடு ஒடுங்கி நின்றவளின் காதைத் திருக, கையைக் கொண்டு போனார். கையை கூன் போட வைத்தபடியே நின்றார். பிறகு அவள் திருப்பி அடிக்கமாட்டாள் என்கிற அனுமானத்தில், அவளது வலது காதைப் பிடித்து திருகியபடியே கத்தினார். -

"அப்பனுக்கும், மகனுக்கும் இடையிலே நீ யாருடி? அவனை கவனிக்கிற சாக்குல, அவன்கிட்ட இருக்கறதைப் பறிக்கிறதுக்கு... ஒன்னை, ஒப்பன் அனுப்பி வச்சானா, ஒம்மாவா...?”

தவசிமுத்து, இப்போது மீனாட்சியின் காதை விட்டுவிட்டு, அவளது வலது கையைப் பிடித்து முறுக்கினார். அவள் வலி பொறுக்க முடியாமல் கலைவாணியைப் போல் அவர் கையைக் கடிக்கக் குறிவைத்தாள். இதற்குள், மனோகர், கட்டிலில் இருந்து குதித்தான். அதற்குள் ஒரு எச்சரிக்கைக் குரல் கேட்டது.

‘ஏய்... கெய்வா... விடுய்யா அவளை... விடுறியா, இல்ல நாலு சாத்து சாத்தணுமா...? கம்னாட்டி... புறம்போக்கு, கஸ்மாலம்... சின்னப் பொண்ணுக்கிட்டயா ஒன் வீரத்தைக் காட்டுறே... என் ஆம்புடையான கூட்டிவாறேன். அதுக்கிட்ட காட்டு’

தவசிமுத்து, மீனாட்சியை விட்டுவிட்டு, அவள் அம்மா குப்பம்மாவை பயந்து பார்த்தார். ஆனாலும் வீறாப்பு குறையாமலே பேசினார்.

"இப்பத்தான் புரியுது... தாயும் மகளுமாய் நல்லாத்தான் பிளான் போட்டு இருக்கிங்க. இவனுக்கு வந்திருக்கிற தீராத நோயை சாக்கா வச்சி, எல்லாத்தையும் உரியறதுக்கு திட்டம் போட்டே. ஒன் மகள பழக விட்டிருக்கே... நான் விடுவனா.. இல்லாட்டால் ஒட்டுவாரொட்டி நோயாளியோட, ஒன்மகளை பழக விடுவியா?”

முப்பத்தைந்து வயது, இருபத்தெட்டைக்காட்டும்படி, வயிறு பெருக்காமல், இடைச்சதை தெரியாமல், காக்காபொன்நிறத்தில் சுடர்விட்ட குப்பம்மா, மகள் மீனாட்சியையும், மனோகரையும், வெறித்துப் பார்த்தாள். நண்டும் சிண்டுமான பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக, தாயோடு மகளாய், இந்த மீனாட்சியைப் பத்துப்பாத்திரம் தேய்க்க வைத்தவள் இவள்தான். இதனால் தான் பெற்ற பெண்ணுக்கு பள்ளிக் கூடத்தில் மத்தியானச்சாப்பாடு கூட கிடைக்காமல் போய்விட்டது. ஆனாலும், இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/159&oldid=1405181" இலிருந்து மீள்விக்கப்பட்டது