பக்கம்:பாலைப்புறா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

சு. சமுத்திரம்

ஏற்பட்டது. ஆனாலும், அந்த மரணம் எஜமானாகுமுன்பு, ஏவலாளாய் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய இக்கட்டான சந்தர்ப்பங்களுக்கே அவள் தள்ளப்பட்டு வருகிறாள்...

அன்றும் அப்படித்தான்...

ஒரு வாரகாலமாக, கட்டிலோடு கட்டிலாய் முடங்கிக் கிடந்தவளிடம், அண்ணி குழல்வாய்மொழி வந்தாள். வந்ததும், வராததுமாய் விபரம் சொன்னாள்.

"நேரு யுவகேந்திரா அதிகாரி குமாரவேல், ஒன்னைப் பார்க்க வந்து இருக்கார். அஞ்சு நிமிஷத்தில நிக்க வச்சே பேசி அனுப்பிடு... நான் சொல்லலம்மா...ஒங்க அண்ணாதான் சொல்லச்சொன்னாரு...”

கலைவாணி, அண்ணியை சங்கடமாய் பார்த்தாள். திருமணத்திற்கு முன்பு போடாத பூட்டு, திருமணத்திற்குப் பிறகும் போடாத விலங்கு, இப்போது தனக்குப் போடப்பட்டிருப்பதை உணர்ந்ததும், கால்கள் வலித்தன. நோவெடுத்தன. நேரு இளைஞர் மைய ஒருங்கிணைப்பாளரான இந்த குமாரவேல், இளைஞர் என்றாலும், முதியவரின் பக்குவம் கொண்டவர். அவரது ஒவ்வொரு வார்த்தையும் பார்வையும், சகோதரியே! என் சகோதரியே! என்று சொல்லாமல் சொல்லும். முன்பெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சிக்காவது, அவர் ஊருக்கு வந்தால், இந்த வீட்டில்தான் சாப்பாடு... எடுத்த எடுப்பிலேயே வராமல், பெண் என்பதால், சிறிது முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு, இந்த வீட்டில் இந்த அறைக்கே வருகிறவர். இந்த குழல்வாய்மொழி அண்ணிகூட, ‘என் நாத்தனாருக்கு ஒரு நல்ல பையனா பார்க்கப்படாதா' என்று கேட்பாள். உடனே அவர், ‘என் மைத்துனனை, தேடிட்டுத்தான் இருக்கேன்’ என்பார். அப்பேர்ப்பட்டவரை, எல்லாரும் வெளியிலேயே நிற்கவைத்துவிட்டார்கள்.

கலைவாணி, அவசர அவசரமாக வெளியே வந்தாள். குமாரவேல், முற்றத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வேறு சந்தர்ப்பமாக இருந்தால், அவர் கையில் ஒரு காபி டம்ளராவது இருக்கும். போதாக் குறைக்கு, தம்பிக்காரன் பலராமன், அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை... அண்ணன் கமலநாதன், கண்களைக் கவிழ்த்திப் பார்க்கிறான். கலைவாணிக்கு, குமாரவேலைப் பார்த்ததும், அழுகை வந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டாள். அந்த அழுகை, அவள் கற்பிற்கு மாசாகக் கருதப்படலாம். அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அவர் கேட்க வேண்டியதை

இவளே கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/165&oldid=1405202" இலிருந்து மீள்விக்கப்பட்டது